நிலை வாசலில் குலதெய்வம் வந்து தங்கி விட்டால், குலதெய்வத்தை மீறி எந்த ஒரு கெடுதலும் நம்முடைய நிலை வாசலுக்குள் நுழைய முடியாது. குலதெய்வத்திற்கு சக்தி அதிகரிக்க கூடிய நாள் என்றால், அது அமாவாசை தினம். தவறாமல் அமாவாசை நாளில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல முன்னோர்களுக்கு கொடுக்கக்கூடிய திதி தர்ப்பணம் காரியங்களை தவறாமல் செய்து விடுங்கள்.
இது உங்களுடைய குடும்பத்திற்கு மேலும் மேலும் நல்லதை கொடுக்கும். நிலை வாசலில் குலதெய்வம் தங்க வேண்டும். நிலை வாசலை தாண்டி எந்த ஒரு கெடுதலும் நம் வீட்டிற்குள் நுழையக் கூடாது என்றால், அமாவாசை நாளில் குலதெய்வத்தை வேண்டி செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அமாவாசை நாளில் மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். ஒரு சிவப்புத் துணியில் 6 பல் தோல் உரித்த பூண்டு வைக்கவும். ஒரு சின்ன கறி துண்டு வைத்து,(இஸ்திரி போடும் கடையில் கிடைக்கும். இல்லை என்றால் கடையிலேயே சார்கோல் (charcoal) கிடைக்கிறது, அதை வாங்கி பயன்படுத்தலாம்.) இதை முடிச்சாக கட்டி நிலை வாசலில் மாட்டி வையுங்கள்.
வீட்டிற்குள் நுழையும் போது தலையில் இந்த முடிச்சு படக் கூடாது. கொஞ்சம் உயரமான இடத்தில் மாட்டி வைக்கவும். நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இந்த முடிச்சு தொங்க விடவும். ஒவ்வொரு அமாவாசைக்கும் பழைய முடிச்சை எடுத்து கால் படாத இடத்தில் தூரமாக போட்டுவிட்டு, புதுசாக பூண்டு, புதுசாக கறி துண்டு, வாங்கி, சிவப்பு துணியில் வைத்து கட்டவும். சிவப்பு துணியையும் புதுசாகத்தான் எடுக்க வேண்டும். பழைய முடிச்சை அவிழ்க்கவே கூடாது. அப்படியே குப்பை தொட்டியில் போடுங்கள்.
இந்த முடிச்சு நிலை வாசலில் இருந்தால் உங்கள் வீட்டிற்குள் எந்த கெட்டதும் நுழையாது. கெட்ட எண்ணத்தோடு யாராவது வந்தால் கூட அந்த எதிர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்திற்கு கெடுதலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளிக்கிழமை சேர்ந்திருக்கக்கூடிய அமாவாசை தினம். இன்றைய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அதே போல அமாவாசை நாள் என்றால் கட்டாயம் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும்.
ஒரு கைப்பிடி கடுகு கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ரசத்துக்கு தாளிக்கும் கடுகு தான். வீட்டில் இருக்கும் கடுகை இதற்கு பயன்படுத்தலாம். நீங்களே உங்களுடைய தலையை 3 முறை சுற்றி, என்னை பிடித்த கண் திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாம் விலக செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த கடுகை அப்படியே நெருப்பில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: அமாவாசையில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
ஒரு மண் அகல் விளக்கில், கட்டி கற்பூரத்தை ஏற்றி, அந்த கடுகை அந்த நெருப்பில் போட்டால் வெடிக்கும். அந்த கடுகு வெடிப்பது போல உங்கள் கண் திருஷ்டி கஷ்டங்கள் எல்லாம் வெடித்துப் போகும் என்பது நம்பிக்கை. உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுடைய கணவருக்கும் கூட, இதுபோல வீட்டில் இருக்கும் பெண்கள் சுற்றி போடலாம். பெண்கள் நீங்களே உங்களுக்கு சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். இனிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.