அம்மன் கலச பூஜை வழிபாடு

kalasa poojai
- Advertisement -

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அந்த கோவிலில் வீற்றிருக்கக் கூடிய தாயாக திகழ்ந்தவள் தான் அம்மன். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் தன் குழந்தையாக பாவித்து யார் ஒருவர் மனதார அம்மனை நினைத்து வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அம்மன் நல்ல வழியை காட்டுவாள் என்பது பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை. அப்படிப்பட்ட அம்மனை கோரிக்கை நிறைவேறுவதற்காக கலசம் வைத்து எப்படி பூஜை செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கலசம் வைத்து பூஜை செய்யும் முறை என்பது பரவலாக அனைவராலும் செய்யக்கூடிய முறைதான் என்றாலும் யாகங்கள் வளர்க்கும் பொழுதும், வீட்டில் ஹோமம் செய்யும் பொழுதும் இந்த கலசத்தை வைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னும் சிலர் இல்லங்களில் பௌர்ணமி தினங்களிலும், வரலட்சுமி விரதம் இருக்கும் காலத்திலும் அல்லது நவராத்திரி சமயத்திலும் கலசம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. நமக்கு இருக்கக்கூடிய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று அம்மனை நினைத்து வழிபாடு செய்யும்பொழுது நாம் கலசத்தை வைத்து வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் அம்மன் மனம் மகிழ்ந்து நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்.

- Advertisement -

கலச பூஜை செய்யும் முறை

இந்த பூஜையை அமாவாசை, பௌர்ணமி அல்லது வாராவாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினங்களில் செய்யலாம். விடியற்காலையில் எழுந்து எப்போதும் போல் குளித்து முடித்துவிட்டு வாசலில் கோலம் போட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அம்மன் படம் அல்லது விக்கிரகத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 9, 12, 24, 51, 108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வாங்கி நம் வீட்டில் இருக்கும் படத்திற்கு ஏற்றவாறு எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாற்ற வேண்டும். அடுத்ததாக வேப்பிலையை மாலையாக கட்டி அம்மனுக்கு போட வேண்டும். இதோடு சேர்த்து வாசனை மிக்க மலர்களையும் மாலையாக போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

இப்பொழுது அம்மன் படத்திற்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அந்த தட்டில் பச்சரிசியை போட்டுக்கொள்ள வேண்டும். மஞ்சள் கலந்த அச்சதை இருந்தாலும் அதையும் போட்டுக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு சிறிய அளவிலான செம்பை வைக்க வேண்டும். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றிய பிறகு காய்ச்சாத பசும்பால் சிறிதளவு, சந்தனம் சிறிதளவு, விபூதி சிறிதளவு, குங்குமம் சிறிதளவு, பன்னீர் சிறிதளவு, பிறகு கொஞ்சம் வேப்ப இலை, அம்மனை மனதார நினைத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழம், ஒரு நாணயம் இவற்றை போட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒன்பது மாயிலைகளை எடுத்து அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். கலசத்தில் வைப்பதற்காக வாங்கி வைத்திருக்கும் தேங்காயை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு மஞ்சளை முழுவதும் தடவி அம்மனின் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை போல் பெரியதாக ஒரு குங்கும பொட்டை வைத்து அந்த தேங்காயை கலசத்தில் மா இலைகளுக்கு மேலே வைத்து விட வேண்டும்.

கலசத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் வேப்பிலைகளை உருவி போட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் ஆறு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு நம்முடைய கோரிக்கையை மனதார அம்மனிடம் கூறிவிட்டு உதிரிப்பூக்களால் கலசத்திற்கு நமக்குத் தெரிந்த அம்மனின் மந்திரங்களையோ அல்லது பெயர்களையோ கூறியவாறு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அம்மனுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். பிறகு சாம்பிராணி தூப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த பூஜையை இத்தனை வாரங்கள் அல்லது இத்தனை பௌர்ணமி நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டு வழிபாடு செய்யலாம். மறுநாள் காலையில் எப்போதும் போல் பூஜை முடித்த பிறகு கலசத்தை கலைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

அம்மனை மனதார நினைத்து முழு நம்பிக்கையுடன் இந்த கலச பூஜையை செய்பவர் உடைய கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -