சமையலறையில் இருக்கும் பொருட்களில் அஞ்சறை பெட்டியும் ஒன்று. இந்த அஞ்சறைப்பெட்டி தெய்வீகத் தன்மை கொண்டது. அஞ்சறை பெட்டியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பொருட்களை போட்டு வைத்திருப்பது வழக்கம். சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், தாளிக்க தேவையான பொருட்கள் என்று அவரவர் விருப்பப்படி போட்டு வைத்திருக்கும் இந்த அஞ்சறை பெட்டியில் ஒளிந்திருக்கும் தெய்வீக ரகசியத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பொதுவாக அன்னபூரணி வாசம் செய்யக்கூடிய சமையல் கட்டை கோவிலாக முந்தைய காலத்தினர் வழிபடுவார்கள். அங்கு வைத்திருக்கும் அம்மி, ஆட்டுக்கல், உரல், அரிசி அளக்கும் படி, முறம், உப்பு ஜாடி, ஊறுகாய் ஜாடி, அஞ்சறை பெட்டி போன்றவற்றை தெய்வமாக நினைத்து பயபக்தியோடு வணங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துபவர்கள் இல்லத்தில் ஒருபோதும் செல்வமானது குறைவதில்லை என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது.
அஞ்சறை பெட்டி என்றாலும், அதில் ஐந்து அறைகள் மட்டும் இருப்பதில்லை 7, 9 என்று வெவ்வேறு எண்ணிக்கையிலான அறைகள் கொண்டு இருக்கும். இந்த அஞ்சறைப்பெட்டியில் தாளிக்க தேவையான கடுகு, வெந்தயம், உளுந்து, கடலை பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு என்று சிலர் வைத்திருப்பார்கள். மற்றொரு சிலர் பட்டை, லவங்கம், கிராம்பு என்று மசாலா பொருட்களும் அடுக்கி வைத்திருப்பார்கள்.
இப்படி அஞ்சறை பெட்டியில் போடப்படும் பொருட்களில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு தெய்வம்சம் பொருந்திய பொருள் ஏலக்காய். ஏலக்காய் புதன் பகவானுக்கு உரிய பச்சை நிறத்திலும், வாசனை மிகுந்த அம்சத்திலும் விளங்கும் ஒரு தெய்வீக மூலிகை பொருளாகும். இந்த ஏலக்காயை மகாலட்சுமிக்கு மாலை கோர்த்து சாற்றி வழிபட்டு வருபவர்களுக்கு பணக்கஷ்டம் வருவதில்லை. அத்தகைய இந்த ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. இந்த ஏலக்காயில் இருக்கும் நறுமணமும், பச்சை நிறமும் ஒரு விதமான தெய்வீக சக்தியை கொடுக்கக்கூடியது.
அஞ்சறைப்பெட்டியில் தவறாமல் ஏலக்காய்க்கு என்று தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கி விடுங்கள். அஞ்சறை பெட்டி காலி ஆகும் பொழுது புதன்கிழமையில் அதை புதுப்பித்து நிரப்பி வையுங்கள். அஞ்சறை பெட்டியை புதன்கிழமை அன்று கழுவி சுத்தம் செய்து நன்கு காய வைத்து பின்னர் புதிய பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். அஞ்சறை பெட்டியில் ஏலக்காய் உடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எப்போதும் போட்டு வையுங்கள், அதிர்ஷ்டம் உங்களை துரத்தும். அஞ்சறை பெட்டியை வடகிழக்கு அல்லது குபேர மூலையில் வைப்பது வாஸ்துபடி ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே:
13-11-2024 புதவார பிரதோஷ வழிபாடு
இந்த அஞ்சறை பெட்டியை புதன்கிழமை அன்று பூஜை செய்யும் பொழுது, பூஜை அறையில் திறந்த நிலையில் வைத்து, அதில் நிரம்ப பொருட்களை வைத்து பூஜையில் நெய் விளக்கு ஒன்றை ஏற்றி வழிபட வேண்டும். புதன்கிழமையில் வழிபடுவதால் பச்சைப் பயறு ஒரு படியில் கோபுரம் போல நிரப்பி வைத்து புத பகவானை நினைத்து மனதாரப் பிரார்த்தித்து வழிபட வேண்டும். இப்படி செய்து வருவதால் பணக்கஷ்டம், வறுமை ஏற்படவே செய்யாது. செல்வம் மேலும் மேலும் சேரும், உழைப்பால் நீங்கள் தொடர்ந்து தடைகள் இல்லாமல் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். உங்களுடைய குடும்பம் மட்டும் அல்லாமல் உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினருக்கும், இது செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு எளிய வழிபாடாகும்.