என்ன குழம்பு செய்றதுன்னு தெரியலையா? அப்பளம் பொரிச்சு சட்டுனு சூப்பரா 10 நிமிஷத்துல ‘அப்பளக்குழம்பு’ செஞ்சிரலாம்!

appala-kolambu
- Advertisement -

தினமும் என்ன குழம்பு செய்வதென்று தெரியாமல் முழிச்சிட்டு இருக்கீங்களா? காய்கறிகள் இல்லை என்றாலும் சில குழம்பு வகைகளை வைக்க முடியும். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அப்பளத்தை போட்டு குழம்பு வைக்க முடியுமா? என்று கேட்டால், ஆமாம் முடியும் என்றே சொல்லலாம். அதுவும் அப்பளக் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எந்த காய்கறியும் இல்லாத சமயங்களில் அல்லது சமையல் விரைவாக செய்ய வேண்டும் என்கிற சமயங்களில் இது போல அப்பளத்தை வைத்து குழம்பு செய்து விட்டால் போதும், பத்தே நிமிடத்தில் வேலை முடிந்து விடும். வித்தியாசமான முறையில் செய்யும் இந்த குழம்பை எப்படி செய்யலாம்? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

appala-kolambu1

அப்பளக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
அப்பளம் – 5, புளி – எழுமிச்சை அளவு, கடுகு – 1 டீஸ்பூன், ஜீரகம் – 1/2 டீஸ்பூன், வெந்தயம் – 1/2 டீஸ்பூன், பூண்டு – 15 பல், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 1, சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணை – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்:
அப்பளக் குழம்பு செய்ய முதலில் அப்பளம் தேவை அல்லவா? அதனால் அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அப்பளக் குழம்பு நல்லெண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காயவிடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து சட்டென அப்பளங்களை சுட்டு எடுக்கவும்.

appalam-fry

அதன் பின்னர் அதே எண்ணெயில் குழம்பும் வைத்து விடலாம். இப்போது தாளிக்க முதலில் கடுகு சேர்க்கவும், பின்னர் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிந்து வந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டுப்பல் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதில் தக்காளி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்குவதற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்கு மசிந்து வதங்கி வந்ததும் சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளவும். சாம்பார் தூள் பச்சை வாசம் போக வதக்கவும். பின்னர் குழம்பு தேவையோ அவ்வளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இப்போது கடாயை மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து குழம்பு கெட்டியாகி வந்ததும் அதில் அப்பளத்தை ஒன்றிரண்டாக சிறிய துண்டுகளாக சேர்க்கவும். லேசாக பிரட்டி எடுத்து கடாயை மூடிவிடவும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் அப்பளக் குழம்பு தயாராகிவிடும்.

appala-kolambu2

அவ்வளவுதாங்க பத்தே நிமிடத்தில் சுலபமாக வெறும் அப்பளத்தை வைத்து அருமையான குழம்பை தயார் செய்துவிடலாம். உளுந்தை வைத்து அப்பளம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த குழம்பு மிகவும் நல்லது. இந்த குழம்பை இதுவரை நீங்கள் செய்து பார்க்கவில்லை என்றால் உடனே செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு செய்ய, ஒரு ரகசிய டிப்ஸ்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -