அரிசி மாவு சப்பாத்தி செய்முறை

pathiri
- Advertisement -

தமிழ்நாட்டில் எப்படி இட்லி, தோசை என்பது பாரம்பரிய உணவாக திகழ்கிறதோ அதேபோல் கேரளாவில் பத்திரி என்று சொல்லக்கூடிய அரிசி மாவு சப்பாத்தி மிகவும் பிரபலமாக திகழும். இந்த அரிசி மாவு சப்பாத்தியை எப்படி மிகவும் எளிதில் அதே சமயம் மிருதுவாகவும் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வழக்கமாக செய்யும் டிபன் வகைகளை தவிர்த்து விட்டு இப்படி அண்டை மாநிலமாக திகழக்கூடிய கேரளாவின் ஸ்பெஷல் ஐட்டங்களை நாம் வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் வித்தியாசமாக அதே சமயம் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி மாவு – ஒரு கப்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி மாவை சேர்த்து நான்கு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த மாவை ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே கடாயில் தண்ணீரை ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவை இதில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளற வேண்டும்.

தண்ணீரை மாவு நன்றாக உறிஞ்சிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மாவு சூடாக இருக்கும் பொழுதே நன்றாக அதை அழுத்தி பிணைந்து கொள்ள வேண்டும். கையில் பிணைய முடியாது என்பவர்கள் பருப்பு கடையும் மத்தை பயன்படுத்தி நன்றாக அழுத்தி பிணைந்தகொள்ளலாம். இதை எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து பிணைகிறோமோ அந்த அளவுக்கு மிருதுவாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தண்ணீர் பற்றவில்லை என்று நினைத்தால் சிறிது தண்ணீரை சூடு செய்து அதில் கையை நனைத்துக்கொண்டு பிறகு பிணைய வேண்டுமே தவிர்த்து தண்ணீரை ஊற்றி பிணைய கூடாது. இப்படி நன்றாக குறைந்தது பத்து நிமிடம் ஆவது அழுத்தி அழுத்தி பிணைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த அரிசி மாவை கொண்டு வந்து விட வேண்டும். பிறகு இதை சப்பாத்தி தேய்ப்பது போல் சிறுசிறு உருண்டைகளாக பிரித்து அரிசி மாவு தூவி தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடான பிறகு நாம் தேய்த்து வைத்திருக்கும் இந்த பச்சரிசி மாவு சப்பாத்தியை அதில் போட்டு திருப்பி எடுக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாவின் நிறம் மாறாமல் வெள்ளையாக இருக்க வேண்டும். இரண்டு புறமும் திருப்பி திருப்பி போட்டு வேகவைத்து நிறம் மாறுவதற்கு முன்பு எடுத்து விட வேண்டும். அவ்வளவுதான் மிருதுவான கேரளா ஸ்பெஷல் பத்திரி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கரும்பு சாறு அல்வா செய்முறை

எளிதில் ஜீரணமாக கூடிய இந்த பச்சரிசி மாவு சப்பாத்தியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -