வீட்டில் எப்பொழுதும் பணம் பெருக்குவதற்கு பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது, சில விஷயங்களை செய்து வைக்க வேண்டும். இது கடவுளின் அருளோடு செய்யும் தொழிலுக்கு உரிய வருமானத்தையும், வீட்டில் தனம், தானியம், ஐஸ்வர்யம், தங்கம் என்று சகல விதமான சௌபாக்கியங்களையும் நமக்கு பெற்று தரும். அந்த வகையில் அரிசி அளக்கும் படியை பூஜை அறையில் எப்படி வைக்க வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
அரிசி அளக்கும் படி என்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரை மகாலட்சுமியின் சொரூபமாக கருதப்படுகிறது. அன்னலட்சுமியின் ஆசீர்வாதமும், அரிசி அளக்கும் படியில் நிறைந்து இருக்கிறது. ஒரு வீட்டில் தனம், தானியம் இந்த இரண்டுமே ரொம்பவும் முக்கியமானது. செல்வமும், தானியமும் இருக்கும் இல்லத்தில் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் குறைவிருக்காது. வறுமை இல்லாத சுகபோகமான வாழ்க்கை அமைவதற்கு அரிசி அளக்கும் படி, பூஜை அறையில் இருப்பது அவசியமாகும்.
வெள்ளிக் கிழமையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் அரிசி அளக்கும் படியை இது போல செய்து வையுங்கள். நிறைந்த செல்வமும், தனமும், தானியமும் பெருகும். வறுமையின்றி செல்வந்தர்களாக உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வரமாக கிடைத்து முன்னேறுவீர்கள். வழக்கம் போல பூஜைக்கு உரிய எல்லாம் ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்த பின்பு, பூஜை செய்யும் முன்னர் அரிசி அளக்கும் படியை நன்கு சுத்தம் செய்து கழுவி சந்தன, குங்கும பொட்டிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அரிசி ஆழாக்கு வெள்ளி, செம்பு அல்லது பித்தளையில் இருப்பது அவசியமாகும். எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை உபயோகிக்காதீர்கள். ஒரு சிறிய அளவிலான பித்தளை தட்டில் சந்தன, குங்குமம் வைத்து, அதன் மீது பச்சரிசியை பரப்புங்கள். அதன் மீது அரிசி அளக்கும் ஆழாக்கை வையுங்கள். படி நிறைய நீங்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் அரிசியை நிரப்புங்கள்.
பாதி அளவிற்கு அரிசியை நிரப்பிய பின்பு அதனுள் சங்கு, சக்கரம், சோழி, குன்றிமணி, தாமரை மணி, தங்க காசு, வெள்ளி காசு, குபேரன் நாணயம், மகாலட்சுமி நாணயம் என்று உங்களிடம் இருக்கக்கூடிய செல்வத்தை ஈர்க்கக்கூடிய ஆன்மீகம் சார்ந்த பொருட்களை போட்டு வைக்கலாம். இதெல்லாம் எங்களிடம் இல்லை என்பவர்கள் சாதாரணமாக மஞ்சள் கிழங்கை மட்டும் போட்டு வையுங்கள் போதும். பின்பு படி நிறைய மீண்டும் அரிசியை கோபுரம் போல நிரப்புங்கள். அதன் மீது சில்லறை நாணயங்கள் வைத்து மகாலட்சுமி, அன்னபூரணி, குபேரர் ஆகியோரை வழிபட்டு, நெய் தீபம் ஏற்றி வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
மாசி இரண்டாவது வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அரிசியை மாற்ற வேண்டும். அதில் இருக்கும் பொருட்களை எடுத்து கழுவி சுத்தம் செய்து காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அரிசியை அலசி நன்கு சுத்தம் செய்து சாதம் வடிக்க பயன்படுத்தலாம். எதையும் வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் செல்வமும், தானியமும் குறைவில்லாமல், வறுமை இல்லாமல், நாம் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை.