அரிசி உப்புமா இப்படித்தான் செய்யணுமா? சுவையான ஆரோக்கியம் நிறைந்த உதிரி உதிரியான அரிசி உப்புமா நீங்களும் எளிதாக செய்ய இத படிச்சு பாருங்க!

arisi-upma0
- Advertisement -

சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள குருணை அரிசி உப்புமா ரொம்பவே சுலபமாக செய்யக் கூடியதாக இருக்கும். ரவை மற்றும் சேமியாவை கொண்டு செய்யப்படும் உப்புமாவை விட இந்த உப்புமா செய்து கொடுத்தால் வீட்டில் இருக்கும் சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். நேரம் இருக்கும் பொழுதே அரிசியை இது போல குருணையாக பொடித்து வைத்துக் கொண்டால் 10 நிமிடம் கூட உப்புமா செய்வதற்கு ஆகாது. இந்த அரிசி குருணையை மூன்று மாதம் வைத்து பயன்படுத்தலாம். சுவையான அரிசி உப்புமா வீட்டில் எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

அரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – அரை கப், தண்ணீர் – 11/4 கப், சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய இஞ்சி – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

அரிசி உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் அரை கப் அளவிற்கு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த பச்சரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அதை ஒரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி ஃபேன் காற்றில் அல்லது வெயிலில் வைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஈரப்பதம் இல்லாமல் காய்ந்ததும் அதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். நொய்யரிசி போல ஒரு அரிசி மூன்றிலிருந்து நான்கு துண்டுகளாக உடைந்து இருக்க வேண்டும். பொடித்ததும் ஒரு முறை இதை சலித்துக் கொள்ளுங்கள், அப்போது தான் மாவு சலிக்கப்பட்டு பொடி அரிசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இன்னொருபுறம் ஒண்ணேகால் கப் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பெருங்காயத்தூள், ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். கீறிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் நீங்கள் பொடித்து வைத்துள்ள குருணையை அரிசியை சேர்த்து வதக்க வேண்டும்.

அரிசி நன்கு 2 நிமிடம் வறுபட்டதும் அரை கப் அரிசிக்கு கொதிக்க வைத்த தண்ணீர் ஒண்ணேகால் கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடுங்கள். அரிசி நன்கு வெந்து உப்புமா போல மாறிவிடும். பிறகு மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிண்டி விட்டு அடிபிடிக்காமல் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மீண்டும் மூடி 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும். அதன் பிறகு திறந்து பார்த்தால் நல்ல உதிரி உதிரியான சுவையும், மணமும் நிறைந்த ஆரோக்கியமான அரிசி உப்புமா ரொம்ப வேகமாக தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -