அஷ்ட ஐஸ்வர்யம் பெற பைரவர் வழிபாடு

bhairavar lakshmi
- Advertisement -

உக்கிர தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக காலபைரவர் வழிபாடு என்பது பலரும் மேற்கொள்ளக்கூடிய வழிப்பாடாகவே திகழ்கிறது. கால பைரவரை ஒருவர் முறையாக வழிபடும் பொழுது எண்ணிலடங்காத நல்ல பலன்களை அவர்களால் பெற முடியும். அப்படிப்பட்ட காலபைரவரை ஐஸ்வரியம் பெருகுவதற்கு எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனிபகவானின் குருவாக திகழக்கூடியவர் என்பதால் சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலபைரவரை வழிபடும் பொழுது அந்த தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவதோடு சனி பகவானின் தாக்கமும் குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் எதிரிகள் தொல்லை நீங்கவும், கடன் பிரச்சனை அகலவும், தீராத துன்பத்தால் கஷ்டப்படுபவர்கள் உடைய துன்பங்கள் நீங்கவும், தீய சக்திகளான ஏவல், பில்லி, சூனியம் போன்றவை நீங்கவும் காலபைரவரை வழிபடலாம். காக்கும் தெய்வமாக கருதப்படக் கூடிய காலபைரவரை நாம் எந்த முறையில் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வரியம் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மட்டும்தான் உக்கிரமான தெய்வமாக இல்லாமல் சாந்தரூபமாக திகழக்கூடியவர். இப்படி இருக்கக்கூடிய பைரவரை தான் நம்முடைய வீட்டில் வைத்து நாம் வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. இவரை வழிபடுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இவருக்கு ஆலயங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது என்பதால் சாதாரண கால பைரவரை நாம் எந்த முறையில் வழிபட்டால் நமக்கு செல்வம் பெருகும் என்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக காலபைரவருக்கு உகந்த தினமாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. இந்த நாளில் நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும் தீரும். அதே சமயம் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் வளர்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட வேண்டும். அல்லது வெள்ளிக்கிழமையில் காலபைரவரை வழிபடலாம்.

- Advertisement -

காலபைரவருக்கு என்று ஒவ்வொரு வகையான தீபங்கள் ஏற்றி வழிபடும் முறை இருக்கிறது. அந்த வகையில் அஷ்ட ஐஸ்வரியம் பெருகுவதற்கு நாம் ஏற்றக்கூடிய தீபமாக கருதப்படுவது தான் வில்வ பழ தீபம். நாட்டு மருந்து கடைகளில் வில்வ பழம் கிடைக்கும். இதை சரிசமமாக வீட்டிலேயே அறுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் பொறுமையாகவும் நிதானமாகவும் சரிசமமாகவும் எந்த வித விரிசலும் விடாமல் அறுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் இருக்கக்கூடிய பழத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதன் ஓட்டை மட்டும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது வளர்பிறை அஷ்டமி திதி அன்றோ காலபைரவர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதற்கு மேல் மஞ்சள் கலந்த பச்சரிசியை பரப்பி அந்த பச்சரிசிக்கு மேல் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வில்வ ஓட்டை வைக்க வேண்டும். பிறகு அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

கடைகளில் விற்கும் மஞ்சள் நிறத்திரியை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக பஞ்சுத்திரியில் மஞ்சளை நன்றாக நனைத்து காய வைத்து எடுத்துச் செல்வது மிகவும் சிறப்பு. மஞ்சள் இல்லாத பட்சத்தில் சந்தனத்திலும் நாம் இந்த திரியை தயார் செய்யலாம். இந்த முறையில் தொடர்ந்து எட்டு வளர்பிறை அஷ்டமியோ அல்லது எட்டு வெள்ளிக்கிழமையோ வில்வ பழத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.

எட்டாவது வாரம் நாம் தீபம் ஏற்றும் பொழுது காலபைரவருக்கு பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து வெள்ளை நிற பூக்களை கொண்டு மாலை தொடுத்து வழிபட வேண்டும். அங்கு வரும் பக்தர்களுக்கு நெய்வேத்தியமாக வைத்த பால் பாயாசத்தை பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர உப்பு பரிகாரம்

இப்படி செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருளை பரிபூரணமாக பெற்று அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

- Advertisement -