அட்சய திருதியை 2023 நேரம் மற்றும் எப்படி வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.

atchaya-thiruthiyai
- Advertisement -

அட்சய திருதியை 2023

பொதுவாக பலரும் அட்சய திருதியை அன்று குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. அப்படி எல்லோரும் நினைக்க காரணம் என்ன? அட்சய திருதியை தினத்தில் தங்கத்தை தவிர்த்து வேறு என்னென்ன பொருட்களை எல்லாம் வாங்கலாம்? என்னென்ன பொருட்களை வாங்க கூடாது? அட்சய திருதியை 2023 நேரம் மற்றும் வழிபாடு இப்படி பல்வேறு தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அட்சய திருதியை என்றால் என்ன?

“அட்சய” என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “வற்றாமல் பெருகிக்கொண்டே இருப்பது” என்பதாகும். இந்து மத புராணங்களின்படி இந்த தினத்தில் தான் வனவாசத்தில் இருந்த பாண்டவர்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை தந்தருளினார் கிருஷ்ண பரமாத்மா. அந்த பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் அன்னம் வந்து கொண்டே இருந்தது, அதைக் கொண்டு பாண்டவர்கள் தங்களை நாடி வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தனர். எனவே அன்னதானம் செய்து புண்ணியத்தை ஈட்டுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக அட்சய திருதியை தினம் விளங்குகின்றது.

- Advertisement -

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்

அட்சய திருதியை தினத்தன்று தங்கள் சக்திக்கேற்ற அளவில் ஏழைகள், உடல் ஊனமுற்றவர்கள், யாசகர்கள் போன்றவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். கோயில் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்து புண்ணியம் பெறலாம்.

அட்சய திருதியை தினம் வறுமை நிலையில் இருக்கின்ற, திருமணமான மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு புத்தாடைகளை தானம் வழங்குவதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

- Advertisement -

அட்சய திருதியை தினத்தன்று வறிய நிலையில் இருக்கும் வேதியர்களுக்கு புத்தாடை, செருப்பு, குடை, விசிறி பச்சரிசி போன்றவற்றை தானம் செய்வதால் நவக்கிரகங்களில் குரு பகவானால் ஏற்படுகின்ற தோஷம் நீங்கி குரு கடாட்சம் உண்டாகும்.

அட்சய திருதியை தினத்தில் தங்க நகை வாங்க முடியாதவர்கள், அன்றைய தினம் தங்களுக்கோ அல்லது தங்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ புத்தாடைகளை வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்கள் அட்சய திருதியை தினத்தன்று வாங்குவதால் மேலும் பல வாகனங்களை வாங்கும் யோகத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

அட்சய திருதியையில் தங்கம் கட்டாயம் வாங்க வேண்டுமா?

அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்கியே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தற்காலத்தில் மக்கள் மனதில் நன்கு படிந்து விட்டது. இந்த தினத்தில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், அது மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கும் என்கிற அடிப்படையில், தங்க நகை வாங்குவதில் தவறேதும் கிடையாது. ஆனால் அட்சய திருதியை தினத்தன்று கட்டாயம் தங்க நகை வாங்கிய தீர வேண்டும் என்கிற எந்த ஒரு நிர்ப்பந்தமும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

அதே போன்று அட்சய திருதியை தினத்தில் தங்க நகையை வாங்க வேறொரு இடத்தில் கடன் வாங்கி வாங்குவதால் தங்க நகை வாங்கும் யோகத்தை போன்றே பிறரிடம் கடன் வாங்கும் யோகமும் கூடிக் கொண்டே செல்லும். எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கள் பொருளாதார சூழ்நிலைக்கேற்ற வகையில் தங்க நகைகளை தாராளமாக வாங்கலாம்.

அட்சய திருதியை 2023 நேரம்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பிறக்கின்ற அட்சயை திருதியை தினத்தன்று காலை 7.49 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.20 மணி வரை அட்சய திருதியை சுபமுகூர்த்த நேரம் நீடிக்கின்றது. எனவே தங்க நகைகளை வாங்க விரும்புபவர்கள் இந்த நேரத்தில் தங்க நகைகளை வாங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை தினத்தன்று புதிதாக வாங்கிய கடலைப்பருப்பு, அச்சு வெல்லம், காய்ச்சாத பசும்பால், பச்சரிசி ஆகிய பொருட்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் லட்சுமி மற்றும் குபேரர் படத்திற்கு முன்பாக வைத்து, பூஜைகள் செய்த பிறகு இந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானம் அளிப்பதால் குபேர கடாட்சம் உண்டாகும்.

மேலும் இந்த சிறப்பான தினத்தில், சுப முகூர்த்த நேரத்தில் கஸ்தூரி மஞ்சள் கிழங்குகள் சிறிதளவு, கல் உப்பு சிறிதளவு ஆகிய பொருட்களை புதிதாக வாங்கி, உங்கள் வீட்டு பூஜை அறையில் லட்சுமி தேவி மற்றும் குபேர பகவான் படத்திற்கு முன்பாக வைத்து, மல்லி பூக்களை சமர்ப்பித்து, இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி லட்சுமி மற்றும் குபேர பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபடுபவர்களுக்கு வறுமை நீங்கும். கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும். செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே: இரவில் நல்ல தூக்கம் வர பரிகாரம்

அட்சய திருதியை தினத்தன்று வாங்கக்கூடாதவை

அட்சய திருதியை எனும் சுப தினத்தில் கருப்பு எள் மட்டும் புதிதாக வாங்க கூடாது என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அன்றைய தினம் மறைந்த தங்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் ஏற்கனவே வீட்டில் இருக்கின்ற எள் பயன்படுத்தி தர்ப்பணம் கொடுக்கலாம்.

- Advertisement -