நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமை படக்கூடிய ஒவ்வொரு நபர்களும் நம்மை எதிரிகளாகவே நினைக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி நினைப்பதோடு மட்டுமல்லாமல் நாம் எந்த வகையிலும் முன்னேற கூடாது என்ற தீய எண்ணத்துடன் தீய செயல்களிலும் ஈடுபடுவார்கள். நமக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை கொடுத்து நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய எப்பேற்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர் நம்மை விட்டு விலகி ஓடுவதற்கு காளியம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
எதிரிகள் காணாமல் போக வழிபாடு
உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவள் காளியம்மன். அசுரர்களை வதம் செய்வதற்காக அம்பிகை எடுத்த அவதாரமாக தான் காளியம்மன் அவதாரம் திகழ்கிறது. அப்படிப்பட்ட காளியம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு கஷ்டம் கொடுக்கக்கூடிய நபர்களை அந்த அம்மன் அழித்து விடுவாள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட அம்மனை எந்த முறையில் வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று தெரிந்து கொள்வோம்.
காளியம்மனுக்கு உகந்த நாட்களாக திகழ்வது அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்றவை தான். இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு 11 எண்ணிக்கையில் அடுக்குச் செம்பருத்தி வேண்டும். இந்த அடுக்குச் செம்பருத்தி பறித்து மாலையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதோடு மூன்று எலுமிச்சம் பழங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் ஒரு பெரிய கட்டி கற்பூரத்தையும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
இப்பொழுது நேராக எலுமிச்சம் பழத்தை எதிரிகளின் தொல்லை முற்றிலும் விலக வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு திரிசூலத்தில் குத்த வேண்டும். அடுத்ததாக இந்த செம்பருத்தி பூ மாலையை காளியம்மனுக்கு சற்ற சொல்லி தங்களின் பெயரிலும் தங்கள் குடும்பத்தின் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக காளியம்மனை 11 முறை வலம் வந்து காளியம்மனுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நாம் எடுத்துச் சென்ற கற்பூரத்தை கைகளால் தூள் தூளாக நுணுக்கி சேர்க்க வேண்டும்.
அவ்வாறு நுணுக்கும் பொழுது தெரிந்த தெரியாத எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தூள்தூளாய் போக வேண்டும், என்னை விட்டு விலக வேண்டும் என்றும் முழு மனதோடு காளியம்மனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். தூளாக்கிய கற்பூரத்தை பிறகு தீப்பெட்டியை பயன்படுத்தி ஏற்றி முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்ப வேண்டும். இப்படி ஒரு முறை காளியம்மனை வழிபாடு செய்ய எதிரிகளின் தொல்லை முற்றிலும் விலகும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் செவ்வாய் ஹோரை பரிகாரம்
காளியம்மனை முழுமனதோடு நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்ய காளியம்மனின் அருளால் எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதோடு அவர்களால் ஏற்பட்ட கஷ்டங்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.