வாஸ்து ஜோதிடத்தின் படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடியது. எந்த திசையில் அந்த சுவர் அமைந்திருக்கிறது என்பதை பொறுத்து அதன் பலன்களும் வேறுபடுகிறது. பொதுவாக வீட்டில் அதிர்ஷ்டம் தரக் கூடிய படங்களை மாட்டி வைத்தால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அவ்வகையில் எத்திசையில் எப்படத்தை மாட்ட பணம் கொழிக்கும்? என்னும் வாஸ்து சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாகவே கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை சார்ந்த படங்கள் பச்சை பசேல் என வீட்டில் இருந்தால் நெகடிவ் வைப்ரேஷன்கள் இல்லாமல் இருக்கும். எழுந்திருக்கும் பொழுதே நீங்கள் நல்ல உணர்வுடன் எழலாம். முடிந்தவரை வீட்டிற்குள் வளர்க்கக் கூடிய சின்னஞ்சிறிய செடிகளை வண்ணம் தீட்டிய பாட்டில்களில் வளர்ப்பது மன ஆரோக்கியத்திற்கு நன்மைகள் தரும்.
படங்கள் என்றதும் ஏழு குதிரை படங்கள் வாஸ்துவின் மிக சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய இந்த படம் சூரியனுக்கு உரியது. தெற்கு திசையில் இந்த படத்தை மாட்டி வையுங்கள், வேலையும், தொழிலும் உங்களுக்கு அமோகமாக நடக்கும். துவண்டு போன உங்களை மீண்டும் தன்னம்பிக்கை கொடுத்து தைரியமாக உழைக்க வைக்கும். புதிய தொழில் துவங்குபவர்கள், இந்த ஏழு குதிரை அதிர்ஷ்ட படத்தை தெற்கு திசையில் வேலை செய்யும் இடத்தில் அல்லது வீட்டில் மாட்டி வைக்கலாம்.
முருகனுக்கு உரிய மயில் படம் வீட்டில் இருப்பது விசேஷமானது. அது போல மயில் தோகை வைத்திருப்பதும் நன்மைகள் தரும். பூஜை அறையில் எப்பொழுதும் மயில் தோகை வைத்திருங்கள். இது பயத்தை போக்கி, ஒருமுகமான சிந்தனையை கொடுக்கும். வீட்டின் வடக்கு திசை சுவற்றில் இந்த படத்தை மாட்டி வைக்க செல்வமானது செழிக்கும். மயில் படத்தை தெற்கு திசையில் மாட்ட அதிர்ஷ்டம் வரும். இதுவரை வராத அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும்.
மலைகளும், மலை சார்ந்த இடங்களும் நிறைந்த இயற்கை காட்சிகள் உடைய படங்களை பெரும்பாலானோர் விரும்பி வாங்கி வைப்பார்கள். இத்தகைய படங்களை வீட்டின் தென்மேற்கு திசையில் மாட்டி வையுங்கள், பகைவர்களும் உங்களுக்கு நண்பர்கள் ஆவார். வீட்டிற்கு பகையோடு வருபவர்கள் கூட, மனம் மாறி நட்புறவு கொள்வார்கள். வீட்டிற்கு அழகு சேர்ப்பது பொருட்கள்! அத்தியாவசிய பொருட்களில் இருந்து, ஆடம்பர பொருட்கள் வரை நீங்கள் விரும்பிய அத்தனை பொருட்களும் உங்களுக்கு சேர்வதற்கு வீட்டின் மேற்கு திசையில் தாமரை, தாமரை நிறைந்த குளம் போன்ற படங்களை மாட்டி வைக்கலாம்.
வீண் விரயம் ஆகாமல் இருக்க, உழைக்கின்ற பணம் நம்மிடம் தங்குவதற்கு நீர்வீழ்ச்சி, அருவி போன்ற படங்களை வீட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள சுவற்றில் மாட்டி வைப்பது நன்மை தரும். ஊற்றெடுத்து மேலிருந்து கீழாக விழக் கூடிய இந்த அருவி, நீர்வீழ்ச்சி போன்ற படங்கள் ஒருவிதமான பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக் கூடியது. இது பணத்தை ஈர்த்து நம்மை மென்மேலும் உயர்வடைய செய்யும்.
இதையும் படிக்கலாமே:
கடன் சுமை குறைய தேய்பிறை சஷ்டி வழிபாடு
கர்ப்பம் தரித்தோர் மற்றும் குழந்தை பாக்கியத்திற்கு வேண்டி இருப்போர் நன்கு சிரிக்கின்ற குழந்தை படங்களை வீட்டின் கிழக்கு பகுதியில் மாட்டி வையுங்கள். தினமும் அந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அது போல படுக்கை அறையில் கிழக்கு பகுதியில் கணவன் மனைவி இருவருமான படத்தை பெரிதாக மாட்டி வையுங்கள். உங்களின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தும் படியான படங்களை மாட்டுவது சிறப்பானது. இது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை குறைக்கும், அன்னோன்யத்தை அதிகரிக்கும்.