இட்லி மாவு இல்லையா? 1 கப் அவல் இருந்தா போதும் ஆரோக்கியமான ‘அவல் அடை தோசை’ இப்படி சுட்டு பாருங்க, உங்களுக்கும் பிடித்துப் போய்விடும்! பிறகு அதையே திரும்பத் திரும்ப செய்வீங்க.

aval-adai-dosai
- Advertisement -

சதா இட்லி, தோசைக்கு மாவு அரைத்து போரடித்து போனவர்களுக்கு இது போல ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவையான, வித்தியாசமான அடை தோசை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அவல், வேர்க்கடலை, உடைத்த கடலை எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த அடை தோசை ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். இன்ஸ்டன்ட் அவல் தோசை மாவு எப்படி அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அவல் அடை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ஒரு கப், வேர்க்கடலை – கால் கப், உடைத்த கடலை – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன். மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

அவல் அடை செய்முறை விளக்கம்:
முதலில் அடை செய்வதற்கு வெள்ளை அவல் ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அதை நன்கு ஓரிரு முறை அலசி பின்னர் அரை கப் அளவிற்கு தண்ணீரை தெளித்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் நன்கு ஊறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் ஊறிய இந்த அவலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறிய வாணலியில் அரை கப் அளவிற்கு வேர்கடலையை நன்கு வாசம் வர வறுத்து பின்னர் அதையும் அவலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒன்றரை டீஸ்பூன் உடைத்த கடலை சேர்த்து மிக்ஸியை இயக்கி ஓரளவுக்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேருங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி பின்னர் காரத்திற்கு பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேருங்கள். வேர்க்கடலை வறுத்த அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளித்து தாளித்த பொருட்களையும் மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த அடை மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

கால் ஸ்பூனுக்கும் குறைவாக பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் கலந்து அடை மாவு பதத்துக்கு எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடை போல கெட்டியாக பரப்பி இருபுறமும் நன்கு வேக எடுத்து பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த அவல் அடை தோசையை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -