சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன

நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாக்கள் அனைத்துமே மனிதனின் வாழ்வில் இருக்கும் அறியாமை, வறுமை போன்றவை நீங்கி அவனது வாழ்வில் அனைத்திலும் வெற்றி மற்றும் வளங்கள் நிறைந்திருக்க செய்யும் பூஜைகள் மற்றும் சடங்குகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. அப்படி நமது அறியாமையை நீக்கும் “சரஸ்வதி பூஜை” மற்றும் நமக்கு செல்வவளத்தை தரும் “ஆயுத பூஜை” விழாக்களின் முக்கியத்துவம் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

“சரஸ்வதி தேவி நமது கல்வி, கலைகளின் தேர்ச்சிக்கும் மற்றும் உண்மை ஞானத்திற்கும் அருள் புரியும் தெய்வமாக இருக்கின்றாள். இந்த தினத்தில் சரஸ்வதி தேவியை “வெள்ளை தாமரை” பூவை சமர்ப்பித்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, சாம்பிராணி மற்றும் தூபங்களை கொளுத்தி, சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை கூறி துதித்து வழிபடுவதால் நமது வீட்டில் கல்வி கற்கும் வயதில் இருப்பவர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை பெறுவார்கள். நமக்கும் சிறந்த ஞானம் மற்றும் குணநலன்களை தருகிறாள் சரஸ்வதி தேவி.

நாம் அனைவருமே செல்வம் சேர்ப்பதற்கு பல விதமான பணிகள், தொழில்களை செய்கின்றோம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் அடிப்படையில் நாம் நமது தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகள் போன்றவற்றை இன்றைய தினத்தில் நன்கு சுத்தம் செய்து, நீரில் கரைத்த சந்தனத்தை அக்கருவிகளின் மீது பூசி, அதன் மீது குங்கும பொட்டிட்டு, விநாயகர்,சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்கள் இருக்கும் படத்திற்கு முன்பு அக்கருவிகளை வைத்து, ஒரு தட்டில் சூடம் கொளுத்தி, தொழில் கருவிகளுக்கு தீபாராதனை காட்டி வழிபட அத்தொழில் கருவிகள் மூலம் உங்களுக்கு வருங்காலங்களில் மேன்மேலும் லாபங்கள் கிடைக்கும், தொழில் கருவிகளில் பழுது ஏற்பட்டு பொருள் செலவு ஆகாமல் தடுக்கும்.

இன்றைய சரஸ்வதி பூஜை தினத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை செய்ய முடியாதவர்கள் நாளைய தினமான விஜயதசமி தினத்தில் “சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை” என மூன்று பூஜைகளையும் ஒன்றாக சேர்த்து செய்யலாம். இப்பூஜைகளை செய்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எல்லா வளங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்கிற மூன்று தேவியர்களின் அருளாசியால் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayudha pooja and Saraswathi pooja details in Tamil.