எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி குருமா, குழம்பு செய்து சாப்பிடுவீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக பேபி கான் வாங்கி செட்டிநாடு ஸ்டைலில் இப்படி ஒரு கிரேவியை செய்து பாருங்கள். அசத்தலான ருசி கிடைக்கும். பேபி கார்ன் கிடைக்கவில்லை என்றால் மஸ்ரூம், மீல்மேக்கர், சிக்கன், மட்டன் எதில் வேண்டுமென்றாலும் இந்த கிரேவியை தயார் செய்யலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அருமையான செட்டிநாடு ஸ்டைல் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
முதலில் 500 கிராம் அளவு பேபி கான் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த பேபி கான் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு தண்ணீரை வடிகட்டி பேபி கானை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 1 ஸ்பூன், ஊற்றி பட்டை – 1 சின்ன துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, வரமிளகாய் – 4, பூண்டு பல் – 4, இஞ்சி தோல் சீவி நறுக்கியது – 2 இன்ச், வரமல்லி – 2 ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் வறுத்துவிட்டு, இறுதியாக சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், அரிசி – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு வறுத்து இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கிரேவியை தாளித்து ஊற்றலாம். குக்கரை அடுப்பில் வையுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, கருவாப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 1, போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு மிகப் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 3, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன், போட்டு தக்காளி பழத்தை குழைய குழைய வதக்கி தயாராக இருக்கும் பேபி கானை இதில் போட்டு, மீண்டும் இரண்டு மூன்று நிமிடம் வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, 2 நிமிடம் போல கொதிக்க வையுங்கள்.
இதற்குள் மிக்ஸி ஜாரை எடுத்து 2 கைப்பிடி அளவு – தேங்காய் துருவல், சோம்பு – 1/2 ஸ்பூன், முந்திரி – 6, கசகசா – 1/2 போட்டு கொஞ்சமா தண்ணீர் விட்டு இதையும் விழுதாக அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் ஊற்றி நன்றாக கலந்து, கிரேவிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரை மூடி இரண்டு விசில் விட்டால் போதும் வீடே மணக்கும்.
இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி, பிரஷ் கிரீம் இருந்தால் இரண்டு ஸ்பூன் இது மேல் ஊற்றி, பரிமாற வேண்டியது தான். சுட சுட சாதம், சப்பாத்தி, தோசை, ஆப்பம், பரோட்டா, நாண் இவைகளுக்கு சூப்பரான சைட் டிஷ் இது. ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.