உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள்! – நெகிழும் `காவடி’ விநாயகம்

murugan-6

தோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த விநாயகத்தின் வாழ்க்கையில், அந்தக் காவடி ஆட்டமே பெருத்த சோதனையைத் தந்துவிட்டது. அந்தச் சோதனை பற்றியும் அவர் அதில் இருந்து மீண்டு வந்ததை பற்றியும் அவரே கூறுகிறார் கேட்போம் வாருங்கள்.

kavadi

”ஒருமுறை திருத்துறைப்பூண்டி பக்கத்துல இருக்கற கிராமத்துல என்னோட காவடி ஆட்டம் நடந்துச்சி. என் ஆட்டத்தைப் பார்க்க ஊரே திரண்டு நின்னுச்சு. நான் தோளில் காவடியைச் சுமந்து ஏணியின் உச்சியில் ஏறி தீபம் கொளுத்தி சுற்றியபடியே ஆடினேன். மக்கள் கைதட்டி ரசித்து திரும்பவும் அதே மாதிரி ஆடச் சொன்னார்கள். அப்போதுதான் விதி விளையாடியது. நான் மெய்மறந்து ஆடிக்கொண்டிருக்கும்போது ஏணி முறிந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தேன்.எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை கண்ணீரோடு என் மனைவி எனக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு உடம்பில் நடு முதுகுத்தண்டு உடைந்திருந்தது.

நான் நேசித்ததும் என்னோட உடம்புக்குள்ள உசுரா இருந்ததுமான கலையை – காவடி ஆட்டத்தை இனிமேல் ஆட முடியாதோ என்ற ஏக்கத்தோடு மூலையில் முடங்கினேன். வலி தாங்க முடியாமல் சிகிச்சையை வேறு பாதியில் நிறுத்தியதால், என் முதுகு கூன் விழுந்ததுபோல் ஆனது. கலையும் இல்லாமல் காவடியும் இல்லாமல் போன என் வாழ்கையின் கறுப்பு நாள்கள் அவை. என் காதுபடவே, ‘இவர் இனிமேல் எழுந்து நடக்க மாட்டார். கைக் குழந்தையோடு நீ எப்படி இனி வாழப்போகிறாய்?’ என்று என் மனைவியிடம் கேட்க ஆரம்பித்தனர் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும். ஏணியில் பறந்த நான் குழந்தைபோல் தரையில் தவழ ஆரம்பித்தேன்.கால் வயிற்று கஞ்சி குடிப்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தே கூலி வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.

kavadi

இப்படியே மூன்று வருஷம் ஆனது. நான் வீட்டில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தேன். அப்போது எங்களுக்கு நிகழ்ச்சிகள் புக் செய்து கொடுக்கும் கறிவேப்பிலை கண்ணன் என்பவர் வந்தார். அவர் என்னிடம், ‘இதப் பாரு காவடி, (அவர் என்னை காவடின்னுத்தான் கூப்பிடுவார்.) இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற? திரும்பவும் காவடி ஆட ஆரம்பி. அப்பதான் எல்லாம் மாறும்’ எனப் பரிவுகாட்டிப் பேசியதோடு, `சுவாமிமலை பக்கத்தில் ஒரு நிகழ்ச்சி புக் பண்ணியிருக்கேன். வந்து ஆடு’ என்று, கூன் விழுந்த முதுகோடு நிமிர்ந்து நடக்கவே முடியாத என் மீது நம்பிக்கைவைத்து அழைத்துச் சென்றார்.

- Advertisement -

kavadi

அவர் அப்படிக் கூப்பிட்டதை அந்த முருகனே வந்து என்னை கூப்பிடறதா நினைச்சி நானும் கிளம்பினேன். இரண்டு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்கவைத்தே அழைத்துச் சென்றார். கூட்டத்துக்கு நடுவே, `சும்மா கொஞ்சமா ஆடு’ என உற்சாகமூட்டினார். ஆனாலும், ஆட முடியவில்லை. வலி பொறுக்காமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. வலியோட நான் துடிக்கறதைப் பார்த்து, ‘சரி, கவலைப்படாத. அடுத்த திருவிழாவில் பார்த்துக்கலாம்’ என்று சொல்லி, செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

kavadi

சில நாள்கள் கழித்து மீண்டும் வந்த அவர், `பழனிக்குப் பக்கத்துல ஒரு திருவிழா’ன்னு அழைச்சுகிட்டுப் போனார். மற்ற கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன் அப்போது விழா கமிட்டியினர், ‘என்னங்க கூன் விழுந்தவரை அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க… நிகழ்ச்சி நடக்குமா?’ என என்னை வைத்துக்கொண்டே கேட்டனர். அழுகையும் ஆத்திரமுமான நான், முருகனை நினைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன்.

இரண்டு மணி நேரம் இடைவிடாமல் ஆடினேன். அப்போதுதான் உடைந்த என் முதுகெலும்பு முழுதாக இணைந்ததை நான் உணர்ந்தேன். முருகப் பெருமானின் அருள்தான் அப்படி ஓர் அதிசயம் நடத்தியது. விழாக் கமிட்டியினர் ஊர் மக்கள் முன்னிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். முருகப்பெருமான் அருள் இல்லை என்றால் இன்றும் நான் கூனோடுதான் வாழ்ந்திருப்பேன். அந்தச் சமயத்தில் எனக்குத் தோளாகவும் தோழியாகவும் இருந்தவள் என் மனைவி வசந்தி. வளைந்துகிடந்த என் முதுகும் வாழ்க்கையும் மெள்ள மெள்ள நிமிர ஆரம்பித்தது” என்று அவர் கூறி முடித்தார்.