பாய் வீட்டு கல்யாண பிரியாணியின் ரகசியம் இந்த பொடி தானா? 1/2 கிலோ பிரியாணி செய்ய, பாய் மாஸ்டரே சொன்ன, மிகத் துல்லியமான அளவுகளுடன் பர்ஃபெக்ட் ரெசிப்பி! இதோ உங்களுக்காக.

biriyani
- Advertisement -

என்னதான் நம்முடைய வீட்டில் பிரியாணி சாப்பிட்டாலும் முஸ்லிம் வீட்டு கல்யாணத்துக்கு போய் அவங்க பிரியாணியை சாப்பிடுவதில் ஒரு சுகம் தான். நிறைய பேர் இந்த பிரியாணி சாப்பிடுவதற்காகவே அவர்களுடைய கல்யாணத்திற்கு செல்வார்கள். முறையாக முஸ்லிம் வீட்டு கல்யாணத்தில் செய்யக்கூடிய அந்த பிரியாணி ரெசிபியை நம்முடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமா. அதற்கான ரெசிபி சரியான அளவுகளில் இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

பாசுமதி பிரியாணி அரிசி – 500 கிராம் (2 1/2 கப்) எடுத்துக் கொண்டால், பின் சொல்லக்கூடிய மற்ற அளவுகள் எல்லாம் உங்களுக்கு சரியாக இருக்கும். இந்த பிரியாணி அரிசியை மூன்று முறை நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 1/2 மணி நேரத்தில் இருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

- Advertisement -

பிரியாணி மசாலா அரைக்க தேவையான பொருட்கள். பட்டை – 5 கிராம் (சின்ன சின்ன துண்டுகளாக 4), கிராம்பு – 2 கிராம்(10), ஏலக்காய் 2 கிராம்(10). உங்களுக்கு கிராம் கணக்கிட முடியவில்லை என்றால் இப்படி எண்ணிக்கை கணக்குகளில் எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவை மொத்தத்தையும் பிரியாணிக்கு பயன்படுத்த போவது கிடையாது. இந்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினால் போதும்.

எண்ணெய் – 100 ml(1/2கப்), நெய் – 25 கிராம்(2 டேபிள்ஸ்பூன்), தாளிப்பதற்கு பட்டை – 5 துண்டுகள், ஏலக்காய் – 7, கிராம்பு – 6, உப்பு – 20 கிராம்(2 டேபிள் ஸ்பூன்), தனிமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், பாதி எலுமிச்சம் பழத்தின் – சாறு, அதிக அளவில் புளிக்காத தயிர் – 100ml(4 டேபிள் ஸ்பூன்), இஞ்சி பூண்டு விழுது – 100 கிராம்(4 டேபிள் ஸ்பூன்), வெங்காயம் – 350 கிராம்(4 மீடியம் சைஸில் இருக்கும் வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும் நைஸாக).

- Advertisement -

தக்காளி பழம் – 200 கிராம்(2 மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம்), பச்சை மிளகாய் – 6 லிருந்து 7, புதினா தழை – 1 கைப்பிடி அளவு, மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, சிக்கன் – 1/2 கிலோ அரிசிக்கு, 1/2 கிலோ சிக்கன் சரியாக இருக்கும். தேவை என்றால் இன்னும் ஒரு 1/4 கிலோ சிக்கனை கூடுதலாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய ருசிக்கு ஏற்ப.

செய்முறை

அடி கனமான கடாய் அல்லது குக்கர், அகலமாக இருக்கும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள். அதில் எண்ணெய் நெய் முதலில் ஊற்றி, அது சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் போட்டு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு 15 நிமிடம் வதக்கவும். (இந்த வெங்காயத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் உப்பிலிருந்து பாதி அளவு சேர்க்கவும்.) எண்ணெயில் வெங்காயம் கோல்டன் பிரவுன் ஆகும் வரை வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்க்கவும். இரண்டு நிமிடம் அடிபிடிக்காமல் இஞ்சி பூண்டு விழுதை பச்சை வாடை போக வதக்கவும். (அடுப்பு மிதமான தீயில் தான் இருக்க வேண்டும் அதை கவனித்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அதன் பிறகு எடுத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி தழை, போட்டு ஐந்து நிமிடங்கள் வதைக்கி விட்டு, மிளகாய் தூள், நாம் அரைத்த பிரியாணி மசாலா 1 ஸ்பூன் சேர்த்து, கருகாமல் 30 செகண்ட்ஸ் வரை வதக்கி விட்டு, உடனடியாக எடுத்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளி பழத்தை போட்டு மூன்றில் இருந்து நான்கு நிமிடம் வதக்கி விடவும்.

அடுத்து எடுத்து சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு மசாலாவில் நன்றாக பிரட்டி விட வேண்டும். 10 நிமிடங்கள் இந்த சிக்கன் கடாயில் இருக்கும் மசாலாவில் வேக வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. அந்த எண்ணெய் மசாலாவோடு கலந்து வேகட்டும். இந்த இடத்தில் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மூடி கூட சிக்கனை வேக வைக்கலாம். சிக்கன் லிருந்து லேசாக தண்ணீர் விட்டு சிக்கன் வேகத் தொடங்கும். சிக்கன் வெந்து வந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் தயிர் சேர்த்து, நன்றாக கலந்து விடுங்கள். இந்த சிக்கனிலிருந்து எண்ணெய் தெளிந்து மேலே வர தொடங்கும். அந்த சமயம் எடுத்து வைத்திருக்கும் லெமன் ஜூஸை இதில் ஊற்றவும்.

சிக்கன் முக்கால்வாசி வெந்து வந்துவிடும். இந்த சமயத்தில், பிரியாணிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும். 1 டம்ளர் பிரியாணி அரிசிக்கு, 1 1/2 டம்ளர் தண்ணீர் சரியாக இருக்கும். தண்ணீரை அளந்து கடாயில் இருக்கும் சிக்கனில் ஊற்றி, மீதம் இருக்கும் உப்பை இந்த இடத்தில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

இந்த இடத்தில் உப்பு சரிபார்க்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் ஊற வைத்த பிரியாணி அரிசியை நன்றாக தண்ணீரை வடித்து, போட்டு அரிசி உடையாமல் கலந்து விட்டு, ஏழு நிமிடம் ஹை ஃபிளிமில் வைத்தால், தண்ணீர் அனைத்தையும் அரிசி உறிஞ்சி கொள்ளும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு மேலே வெயிட் ஆனா கல் வைத்து பிரியாணியை 20 நிமிடம் தம் போட்டால் சூப்பரான பிரியாணி தயார்.

இதையும் படிக்கலாமே: 1/2 கப் தயிர் இருந்தா நல்ல காரசாராமான இந்த சட்னியை சட்டுனு செய்ஞ்சி பாருங்க. ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த சட்னி இட்லி, தோசை சப்பாத்தி என எல்லாத்துக்குமே நல்ல காம்பினேஷன்.

அப்படியே மணக்க மணக்க ஊசி ஊசியாக அரிசி வெந்து நமக்கு கிடைத்திருக்கும். மேலே சொன்னபடி பின்பற்றினாலே பிரியாணி சூப்பராக வந்து விடும். இதில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரியாணி அரிசி எப்படி வேகும் என்பதை பார்த்து கொஞ்சம் பக்குவமாக தம் போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சில அரிசி சீக்கிரம் வேகும். சில அரிசி வேகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அதை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். ட்ரை பண்ணி பாருங்க. இந்த வாரம் சண்டே உங்க வீட்ல இந்த பிரியாணி தானே.

- Advertisement -