நவநாகரீக உலகில் மெஷின் போல ஓடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஆசனம் என்ற பெயரை கேட்டாலே தலைசுற்ற ஆரம்பித்து விடும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதில் ஈடுபாடு வருவதில்லை. சோம்பேறித்தனம் நம் வைராக்கியத்தை விட வேகமாக முந்திக் கொள்கிறது என்று புலம்புபவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம்.
ஆசனத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், எந்த ஆசனமும் இதுவரை செய்ததே இல்லை என்று கூறுபவர்களும் மிக மிக எளிதாக செய்யக்கூடிய இந்த ஆசனம் தினமும் ஐந்து நிமிடம் செய்தாலே தொப்பை இருந்த இடம் தெரியாமல் மாயமாகிவிடும். கழுத்து வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல யோகாசனம் என்றே கூறலாம். அத்தகைய அற்புதமான ஆசனம் பற்றிய தகவல்களை தொடர்ந்து இந்த யோக முத்திரைகள் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
பாலாசனம் செய்யும் முறை:
சைல்ட் போஸ் (child pose) எனப்படும் இந்த ஆசனத்தின் பெயர் “பாலாசனம்” ஆகும். குழந்தை தவழ்வது போல கிட்டத்தட்ட இருக்கக் கூடிய இந்த ஆசனம் செய்வதற்கு ரொம்பவே சுலபமானது, ஆனால் பலன்கள் மட்டும் அளப்பரியது. மேலே உள்ள படத்தில் காட்டி உள்ளபடி இந்த ஆசனத்தை மூச்சை உள்ளே இழுத்து விட்டபடி செய்ய வேண்டும். முதலில் முழங்கால் தரையில் படும்படி முட்டி போட்டு இரு கால்களையும் V ஷேப்பில் வைத்து, இரு கால் கட்டை விரல்களும் ஒன்றிணைம்படி வைத்து, பிட்டத்தை கால்களின் மீது வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். இரு தொடை பகுதிகளை லேசாக விரித்து, இரண்டு கைகளையும் மேலே தூக்குங்கள். இப்போது மூச்சை உள்ளே இழுத்து அப்படியே மெதுவாக குனிந்து வாருங்கள்.
நெற்றி பகுதி தரையில் படும்படி வைத்து, இரு கைகளையும் தரையில் நேராக நீட்டி வையுங்கள். பிட்டத்தை தூக்கக்கூடாது. இப்போது மூச்சை வெளியில் மெதுவாக விட வேண்டும். சில வினாடிகள் அப்படியே இருந்து விட்டு, பின்பு மீண்டும் மூச்சை இழுத்தபடியே பழைய நிலைக்குச் செல்லுங்கள். இது போல தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஐந்திலிருந்து பத்து முறை செய்தால் போதும். வயிற்றில் இருக்கும் கொழுப்புகள் கரைய ஆரம்பித்து விடும். தொடை பகுதிகள் வலுவாகும். முதுகு வலி தீரும். தோள்பட்டை, மூட்டு வலியும் குணமாகும். கழுத்து பிரச்சனைகளும் நிவாரணம் பெறும். தொடர்ந்து அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்த பாலாசனம் நல்ல ஒரு யோகாசனமாக அமையும்.
யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யலாம்?
மனசோர்வு, உடல் சோர்வு, உடல் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யலாம். தூக்கமின்மை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து இது நிவாரணம் தரும். மூட்டு, தொடை பகுதியில் இருக்கும் தசை நார்களுக்கு வலு சேர்க்கிறது. தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கிறது. பதட்டத்தை குறைக்கிறது. மனதை லேசாக்குகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. குறிப்பாக தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை கொண்டு செல்கிறது. அடி வயிறு மற்றும் மார்பு பகுதியை ரீவேக்ஸ் செய்கிறது.
இதையும் படிக்கலாமே:
பழைய மண் அகல் விளக்குகளை புதுசு போல மாற்ற டிப்ஸ்
யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது?
அதீத மூட்டு மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள், உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளோர் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.