ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வாரத்தில் ஒருமுறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியத்தை நம்மால் பேணிக்காக்க முடியும். அந்த வகையில் பார்லி அரிசி என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான அரிசியாக திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்லி அரிசியை வைத்து எப்படி சுவையான கஞ்சி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
பார்லி அரிசியை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது செரிமான கோளாறுகளை நீக்க உதவுகிறது. உடல் உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய நோய், ரத்த சோகை போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் மலட்டுத்தன்மையை நீக்கவும் இந்த அரிசி உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- பார்லி அரிசி – 100 கிராம்
- கேரட் பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
- பீன்ஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
- வெங்காயம் – 1
- பூண்டு பொடியாக நறுக்கியது – ஒரு ஸ்பூன்
- இஞ்சி பொடியாக நறுக்கியது – ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
- மிளகு – 1/2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – 4 டம்ளர்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் பார்லி அரிசியை போட்டு வறுக்க வேண்டும். லேசாக நிறம் மாறிய பிறகு அதில் மிளகு மற்றும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அரிசி முற்றிலுமாக வறுபட்ட பிறகு அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்க வேண்டும். இப்பொழுது மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, இஞ்சி இவை இரண்டையும் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
பச்சை வாடை போன பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வெந்த பிறகு அதில் கேரட், பீன்ஸ் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இப்பொழுது ஆரிய பார்லி அரிசியை ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ் பாதி அளவு வெந்த பிறகு அதில் நான்கு டம்ளர் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்திருக்கும் பார்லி அரிசி மாவில் இருந்து நான்கு ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கட்டி விழாத அளவிற்கு கிளற வேண்டும். குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான பார்லி அரிசி கஞ்சி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: கருவேப்பிலை பொடி செய்முறை
வெறும் பார்லி அரிசியை மட்டும் வைத்து கஞ்சி செய்யும் பொழுது அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த முறையில் காய்கறிகளை சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவை மேலும் அதிகரிக்கும் என்பதால் விரும்பி சாப்பிடுவார்கள்.