கருவேப்பிலை பொடி செய்முறை

karuvepilai podi
- Advertisement -

ஆரோக்கியமான பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நம் உடம்பில் சேருகிறது. அந்த வகையில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த கருவேப்பிலையை நாம் உணவில் சேர்த்தாலும் அதை உண்ணுவது கிடையாது. அப்படிப்பட்ட கருவேப்பிலையை பொடியாக செய்து நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம்மை அறியாமலேயே நாம் அதை சாப்பிட்டு விடுகிறோம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கருவேப்பிலையை வைத்து எப்படி பொடி செய்து பயன்படுத்துவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

கருவேப்பிலையில் பல எண்ணில் அடங்காத சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இதனால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் குறைகிறது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவு குறைக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்தல் பிரச்சனை நீங்கவும், இளநரை பிரச்சினை குறையவும் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • உளுந்து – 5 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 5 டீஸ்பூன்
  • வேர்க்கடலை – 2 கைப்பிடி
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கருப்பு எள் – 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • கருவேப்பிலை – 3 கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயம் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எண்ணெய் அல்லது நெய்யை சேர்க்க வேண்டும். இரண்டையும் கூட சேர்க்கலாம். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, மிளகு, சீரகம், கருப்பு எள் இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் லேசாக நிறம் மாறிய பிறகு இதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு இவை அனைத்தையும் எடுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் கருவேப்பிலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். கருவேப்பிலை நன்றாக வறுபட்ட பிறகு அதில் உப்பை சேர்த்து அதையும் வறுக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து இதையும் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் சேர்த்து அதனுடன் பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை பயன்படுத்தி கருவேப்பிலை சாதமும் செய்யலாம். அதே சமயம் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவற்றிற்கு மிளகாய் பொடியாகவும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி தொட்டுக் கொள்ளலாம். மிகவும் ஆரோக்கியமான சத்த நிறைந்த கருவேப்பிலை பொடி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: அரிசி மாவு சப்பாத்தி செய்முறை

பல அற்புத சத்துக்களை கொண்ட கருவேப்பிலையை இந்த முறையில் பொடியாக செய்து கொடுப்பதன் மூலம் கறிவேப்பிலையின் சத்துக்களை முழுமையாக பெறுவோம்.

- Advertisement -