பீட்ரூட் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறி. பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் இதை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் கொண்டைக்கடலை பீட்ரூட் இவைகளை வைத்து சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். விருப்பமாக ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிடுவாங்க. குறிப்பாக லஞ்ச் பாக்ஸில் கட்டிக்கொடுக்க இது ஒரு சூப்பர் ரெசிபி. இதற்கு பீட்ரூட் கொண்டைக்கடலை சாதம் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.
முதலில் 2 கப் அளவு உதிரி உதிரியாக சாதத்தை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி, எந்த அரிசியாக இருந்தாலும் அது அவரவர் விருப்பம் தான். அடுத்தபடியாக இரண்டு கைப்பிடி அளவு வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீரில் போட்டு ஊறவைத்து, வேகவைத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சாதத்தைத் தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், நீளமாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக வெங்காயத்தை வதக்க வேண்டும்.
அதன் பின்பு தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது, பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 2 கைப்பிடி அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, வேக வைத்த கொண்டைக் கடலையையும் கடாயில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் பீட்ரூட்டை வேக வையுங்கள். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும். ஏனென்றால் தண்ணீர் ஊற்றி பீட்ரூட்டை வேக வைக்க வில்லை. எண்ணெயிலேயே பீட்ரூட் வதங்கி வேக வேண்டும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பீட்ரூட் நன்றாக வெந்து வந்த பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு இந்த எல்லா மசாலாப் பொருட்களையும் நன்றாக ஒருமுறை கலந்துவிட்டு உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதோடு கொட்டி, மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி, அப்படியே 1 ஸ்பூன் நெய் விட்டு, தேவைப்பட்டால் சாதத்திற்கு தேவையான உப்பு போட்டு, நன்றாக கலந்து விடவேண்டும்.
மசாலாவும் சாதமும் ஒன்றாக கலந்து சூடான உடன் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு இந்த சாதத்தை அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து எடுத்து பரிமாறி பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி இது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.