பீட்ரூட், இதை பார்த்தாலே காய்கறி கடையிலிருந்து பல பேர் வாங்கவே மாட்டாங்க. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட்டை குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது சமைத்து கொடுக்க வேண்டும். பெரியவர்களும் கட்டாயம் சாப்பிட வேண்டும். ரத்த சோகை நீங்க, உடலில் ரத்தம் அதிகரிக்க, இந்த சிவப்பு காய் அவசியம் தேவை. ஆனால் இப்படி எல்லாம் சொன்னால் நாம் இதை சாப்பிடுவோமா. நிச்சயம் சாப்பிட மாட்டோம். நாவிற்கு ருசி தரும் படி அல்வா செய்து கொடுத்தால் சாப்பிடுவோம். அதை அடிக்கடி சாப்பிட முடியாது. சர்க்கரை வியாதி வந்துவிடும். சரி, இந்த பீட்ரூட்டை ருசியாக எப்படித்தான் செய்வது. இதோ மிக மிக சுவை தரும் பீட்ரூட் பச்சடி ரெசிபி உங்களுக்காக.
செய்முறை
முதலில் ஒரு 150 கிராம் அளவு உள்ள பீட்ரூட்டை எடுத்து காம்பு நீக்கி தோல் சீவி அதை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், பச்சை மிளகாய் – 2 போட்டு, மிகக் குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி இதை அரைத்து, இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் முதலில் வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட், 1/4 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து ஒரு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பீட்ரூட் நன்றாக வெந்து வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி சூடு மட்டும் செய்தால் போதும். அதிக நேரம் கொதிக்க விட தேவை இல்லை. அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் தயிர் 1 1/2 கப் அளவு ஊற்றி நன்றாக கலந்து விடுவோம்.
ஒரு தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய், கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை தாளித்து, இந்த தாளிப்பை அந்த பீட்ரூட் பச்சடியில் கொட்டி நன்றாக கலந்து விட்டு பரிமாறி பாருங்கள். இது வேற லெவல் சுவை தரும்.
இந்த பீட்ரூட் பச்சடியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு, சைடிஸ் ஆக வைத்து சாப்பிட்டாலும் அருமையான சுவையில் இருக்கும். இந்த தாலிப்பை தேங்காய் எண்ணெயில் கொடுத்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
பீட்ரூட்டை நறுக்கி போடுவதற்கு பதில் துருவிப்போட்டு கூட நீங்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். மிக மிக எளிமையான ரெசிபி. புதுமையான ரெசிபி. சுலபமான ரெசிபி. அதைவிட முக்கியம் இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.