தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல நம்முடைய மூளை, தோல், கண்கள், மூடி, நகங்கள், கல்லீரல், நரம்புமண்டலம் இவைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயோட்டின் சத்து நிறைந்த ஒரு லட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குறிப்பா குழந்தை பெற்ற பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பயோட்டின் ஊட்டச்சத்து மிகமிக அவசியம் தேவை. எலும்புகள் உறுதி பெற எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பாதாம் பருப்பு, பசுமையான கீரை வகைகள், பசும்பால், இவைகளில் பயோட்டின் சத்து நிறைந்துள்ளது. இதுதவிர பயோடின் சத்து நிறைந்த விதைகளும் உள்ளது. அந்த விதைகளை வைத்து தினந்தோறும் நாம் சாப்பிடும் படியான சுவையான இனிப்பான லட்டுவை எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் பாதாம் பருப்பு – 1/4 கப், வால்நட் – 1/4 கப் சூரியகாந்தி விதை – 1/4 கப், முலாம்பழம் விதை – 1/4 கப், பூசணி விதை – 1/4 கப், ஆளி விதை – ஒரு டேபிள் ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் சூடான கடாயில் போட்டு, 5 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை அகலமான ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த நட்ஸ் வகைகளிலும், விதைகளிலும் கூட பயோட்டின் சத்து மிக மிக அதிக அளவில் உள்ளது.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் ஆரிய இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் பொடி செய்து கொள்ளுங்கள். இப்போது நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் கொரகொரப்பாக அரைத்து இருக்கும். இதோடு தேங்காய்துருவல் – 1/4 கப் அளவு, பேரிச்சம்பழம் – 4, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 1/4 கப், ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஓட விடுங்கள்.

அரைத்த இந்த பொடியை ஒரு தட்டில் கொட்டி, கட்டிகளை உடைத்து விட்டு, உங்கள் கையை கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்தால் அழகான லட்டு நமக்கு கிடைத்துவிடும். இதை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது. தினமும் ஒரு லட்டு சாப்பிட்டாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம்.
இதை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். முடிந்தவரை இரவு நேரத்தில் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்துக்கொள்வது நல்லது. இது ஜீரணமாவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். இந்த லட்டுவை மட்டும் சாப்பிட்டுவிட்டு எல்லா பிரச்சனையும் சரியாகிவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

சரியான அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த மற்ற டயட்டை ஃபாலோ பண்ணிக்கோங்க. ஜங்க் ஃபுட் அறவே தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம். மேலே சொன்ன விஷயங்களை சரியான முறையில் பின்பற்றி, கூடவே இந்த ஒரு லட்டுவையும் சாப்பிட்டுவர நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஒரு சில நாட்களிலேயே முடி உதிர்வு நிற்கும். முயற்சி செய்து பாருங்கள்.