வித்தியாசமான பாம்பே சட்னி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு சுலபமான சூப்பர் சைட் டிஷ் இது.

bomay-chutney
- Advertisement -

பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் கடலை மாவை வைத்து பாம்பே சட்னி செய்வார்கள். ஆனால் அந்த பாம்பே சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பாம்பை சட்னியை சுலபமாக செய்து விடலாம். அதேசமயம் சுவையாகவும் செய்யலாம். சிம்பிள் சூப்பர் ரெசிபியை வாங்க பார்த்திடலாம்.

முதலில் ஒரு ஸ்பூன் அளவு வரமல்லியை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து, ஒரு சிறிய உரலில் போட்டு கொரகொரப்பாக நசுக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி கொண்டாலும் சரி தான் இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக 1 1/2 ஸ்பூன் அளவு கடலை மாவை ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து இதையும் அப்படியே வைத்து விடுங்கள்.

kadalai-maavu

இப்போது சட்னியை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் – 30, தோலுரித்து பொடியாக நறுக்கியது கடாயில் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை இந்த வெங்காயத்தை வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பெரிய சைஸ் – 1 தக்காளியை பொடியாக வெட்டி வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இதனோடு கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் கீணியது – 6 லிருந்து 8 சேர்த்து வதக்கி விடுங்கள்‌. இறுதியாக கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து வெங்காயம் தக்காளி நாம் சேர்ந்து இருக்கும் அத்தனை பொருட்களும் குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

bomay-chutney1

அடுத்தபடியாக 3 டம்ளர் அளவு தண்ணீரைக் இந்த கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, 2 கொதி வாரவிடுங்கள். ஏற்கனவே கடலை மாவை தண்ணீரில் கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா அதை இந்த கடாயில் ஊற்றி கலக்கவேண்டும். இந்த குழம்பு உடனடியாக கட்டியாக மாறிவிடும். உடனே அடுப்பை அணைத்து விடக்கூடாது. எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் கடலை மாவு நன்றாக கொதித்து வேக வேண்டும்.

bomay-chutney2

ஒருவேளை உங்களுக்கு குழம்பு ரொம்பவும் கட்டியாகி விட்டால், கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை வைத்து மீண்டும் குழம்பில் ஊற்றி கொள்ளலாம். பிரச்சனை எதுவும் கிடையாது. குழம்பு நன்றாக கொதித்து வரும்போது பொடித்து வைத்திருக்கும் வரமல்லி பொடியிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு இதன் மேலே தூவி விடுங்கள். 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச் சாறு இதில் ஊற்றி கலந்து, கொஞ்சம் கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் சூப்பரான பாம்பே சட்னி தயார். முடிந்தவரை இந்த சட்னியை சுடசுட சாப்பிட்டு விட வேண்டும். கொஞ்சம் ஆறி விட்டால் இதன் சுவை குறைவாக தெரியும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -