5 பிரட் துண்டுகள் இருந்தா போதும் சட்டுனு சுவையான ‘பிரட் பக்கோடா’ 5 நிமிடத்தில் இப்படி செஞ்சு அசத்திடலாமே! நீங்களே விரும்பி சாப்பிட போறீங்க.

bread-pakkoda0
- Advertisement -

வீட்டில் பிரட் துண்டுகள் இருந்தால் சட்டென்று யோசிக்காமல் மாலை வேளையில் இது போல உதிர்த்து விட்டு சூப்பரான டேஸ்டான ‘பிரட் பக்கோடா’ செஞ்சு கொடுத்து பாருங்க! வீட்டில் இருப்பவர்கள் உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள். குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்தமான இந்த ‘பிரட் பக்கோடா’ நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பிரெட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 5, பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

பிரட் பக்கோடா செய்முறை விளக்கம்:
பிரெட் பக்கோடா செய்வதற்கு முதலில் பிரெட் துண்டுகளை பிய்த்து போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பிரட் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பெரிய வெங்காயம் ஒன்றை மட்டும் தோலுரித்து நான்கைந்து துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் கெட்டியாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது, ரொம்பவும் நைசாக அரைத்து விடக்கூடாது.

அரைத்த விழுது கொஞ்சம் கெட்டியாக இருக்கும் எனவே அதை நன்கு கைகளால் உதிர்த்து விட்டு கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 4 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பக்கோடா செய்வதற்கும் கடலைமாவு கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் சீரகம், மஞ்சள் தூள் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பெருங்காயத்தூள் கால் ஸ்பூனுக்கும் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது இஞ்சி மற்றும் பூண்டு துண்டுகளை ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உரலில் இட்டு நசுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் எல்லா பொருட்களையும் நன்கு கைகளால் கலந்து விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் அளவிற்கு தண்ணீரை தெளித்து பக்கோடா செய்வதற்கு ஏற்ப நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த பக்கோடா மாவு தயார் ஆனதும் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் பக்கோடா செய்வதற்கு ஏற்ப நன்கு தாராளமாக எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பக்கோடா போடுவது போல போட்டுக் கொள்ளுங்கள்.

எல்லா இடங்களிலும் போட்டுக் கொண்ட பின்பு இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இல்லை என்றால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டுவிடும். 2 நிமிடத்திற்கு பிறகு எல்லா பக்கங்களையும் லேசாக கரண்டியால் பிரட்டிவிட்டு எல்லா புறமும் ஒன்று போல சிவக்க வறுபட்டதும் சுவையான இந்த பிரட் பக்கோடாக்களை ஜர்னி அல்லது வடை கரண்டியில் எண்ணெயை வடிகட்டி விட்டு எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க.

- Advertisement -