சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு காலிஃபிளவர் கிரேவி செஞ்சி பாருங்க. இந்த கிரேவி இருந்தா போதும் அசைவம் கூட தேவைப்படாது. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கு காலிபிளவர் கிரேவியை சுலபமாக அதே நேரத்தில் ருசியாகவும் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
இந்த கிரேவி செய்ய முதலில் இரண்டு உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி சின்னதாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்து விடுங்கள். அதே போல் ஒரு சிறிய காலிஃப்ளவரை எடுத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி நல்ல சூடான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூள் உப்பு கலந்து அதில் போட்டு வைத்து விடுங்கள்.
இப்போது இந்த கிரேவிக்கு ஒரு மசாலா அரைத்து விடுவோம். அதற்கு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் மிளகு, இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, பூண்டு ஐந்து பல், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சீரகம் சேர்த்து பொரிய விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இரண்டு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
இப்போது நாம் அரைத்து வைத்த மசாலாவையும் இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள்,ஒரு டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைத்து விடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கலந்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வரை வெந்த பிறகு, நறுக்கி வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கி விடுங்கள். சுவையான உருளைக்கிழங்கு காலிபிளவர் கிரேவி தயார்.
இதையும் படிக்கலாமே: குல்பி ஐஸ் செய்முறை விளக்கம்:( Kulfi Ice Recipe in Tamil)
இந்த கிரேவி கொஞ்சம் கெட்டியாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இந்த கிரேவி ஒரு அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த ரெசிபி பிடிச்சிருந்தா நீங்களும் ஒரு முறை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.