கருப்பாக இருந்தாலும் கலராக இருந்தாலும் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்கும் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்குவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான எண்ணையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக ஒருவருடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்க வேண்டும், கரும்புள்ளிகளை மறைய செய்ய வேண்டும், முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது கிரீமை பயன்படுத்துவோம். அல்லது ஃபேஸ் பேக் போன்றவற்றை பயன்படுத்துவோம். இவ்வாறு பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு எண்ணையை மட்டும் நாம் தயார் செய்து வைத்துக் கொண்டு அந்த எண்ணையை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவினால் போதும்.
முகம் மட்டுமல்ல உடல் முழுவதுமே தடவி நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் நம்முடைய சருமம் முழுவதும் மிகவும் பிரகாசமாக திகழும். அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். இந்த எண்ணையை தயார் செய்வதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். ஒன்று கேரட் மற்றொன்று சுத்தமான தேங்காய் எண்ணெய். கேரட்டில் பல சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
பொதுவாக கேரட்டை நாம் அப்படியே சாப்பிடுவதன் மூலமும் நம்முடைய சரும நிறம் என்பது மேம்படும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேரட்டை வைத்து தான் கேரட் எண்ணெய் தயார் செய்ய போகிறோம். இதற்கு ஒரே ஒரு பெரிய கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்து சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அரைத்த கேரட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி ஒரு மணி நேரம் மூடி வைத்துவிட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் இந்த கேரட்டையும் எண்ணெயையும் மாற்றி விட்டு அடுப்பில் வைத்து 20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்றாக வேகவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அதை முற்றிலும் ஆர விடுங்கள்.
பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இந்த கேரட்டில் இருந்து எண்ணெய் மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கேரட் எண்ணெய் தயாராகிவிட்டது. விருப்பம் இருப்பவர்கள் இதில் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ளலாம். இதை நாம் குளிப்பதற்கு முன்பாக நம்முடைய முகம் கை கால்கள் போன்றவற்றில் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு எப்பொழுதும் போல் குளித்துவிட்டு வரலாம். இதை சிறு குழந்தைகள் முதற்கொண்ட அனைவரும் உபயோகப்படுத்தலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. இயற்கையான முறையில் நம்முடைய சருமம் பொலிவுடன் திகழும்.
இதையும் படிக்கலாமே புளித்த தயிர் அழகு குறிப்பு
மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து நாமே கேரட் எண்ணெய் தயார் செய்து நம்முடைய சருமத்தை பொலிவுடன் அழகாகவும் மாற்றிக் கொள்ளலாம்.