சிக்கன் 65 எந்த அளவிற்கு பிரபலமோ, அதே அளவிற்கு இந்த காலிஃபிளவர் 65வும் அனைவருக்கும் பிடித்த பிரபலமான உணவு தான். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கூட இந்த காலிஃபிளவர் 65 என்றால் கொஞ்சம் விருப்பமாக சாப்பிட தான் செய்வார்கள். என்ன இதை சரியான பக்குவத்தில் செய்யா விட்டால், கிரிஸ்ப்பியாக இல்லாமல் காலிஃபிளவர் பஜ்ஜி போல வந்து விடும். அப்படி ஆகாமல் மொறு மொறு என்று 65 செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப், மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன், கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன், கடலை மாவு – 1 ஸ்பூன், காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன், மிளகு தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் -1/2 ஸ்பூன், உப்பு – 1ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், தனியா தூள் -1 ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் – 250 கிராம்.
செய்யமுறை
காலிஃபிளவர் 65 செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து காலிஃபிளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது காலிஃப்ளவர் 65 செய்ய மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், இதற்கு பதிலாக தனி மிளகாய் தூள் சேர்ப்பவர்கள் ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்).
அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை குழைத்து வைத்து கொள்ளுங்கள். காஷ்மீரி சில்லி சேர்க்கும் போது இதற்கு தனியாக கலர் பவுடர் சேர்க்க வேண்டாம். தனி மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
காலிஃபிளவர் மசாலாவில் ஊறிய பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான உடன் அதை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃபிளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃபிளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃபிளவர் மெது மெது வென்று ஆகி விடும்.
இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கருவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.
இதையும் படிக்கலாமே: வியாதிகளை விரட்டும் சத்துக்கள் நிறைந்த கம்பு தோசையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் நம்முடைய வீட்டிலேயே 10 நிமிடத்தில் எளிதாக செய்வது எப்படி?
இந்த முறையில் செய்தால் கடையில் செய்யும் 65 வை விடவே, நீங்கள் செய்யும் இந்த காலிஃபிளவர் 65 மிகப் பிரமாதமாக இருக்கும். இதை சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக சொல்லுவார்கள்.