அதிக அளவில் புரத சத்து, நார் சத்து, பீட்டா கரோட்டின், இரும்பு சத்து, பிகாம்பிளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் என்று வியாதிகளை விரட்டியடிக்க கூடிய அத்தனை சத்துக்களையும் தன்னில் கொண்டுள்ள கம்பு மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. கம்பு மாவு வாங்கி வைத்துக் கொண்டால் சட்டுன்னு மொறு மொறுன்னு சுவையான கம்பு தோசை இப்படி கூட செய்யலாம். இதனுடன் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னியும் எளிதாக எப்படி அரைப்பதுன்னு? தெரிஞ்சிக்குவோம் வாங்க.
சத்துள்ள கம்பு தோசை தயாரிப்பது எப்படி?
முதலில் கம்பு தோசை செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு கம்பு மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் கப் அளவிற்கு மட்டும் கோதுமை மாவு சேர்த்தால் தோசை அழகாக வார்க்க வரும். பின்னர் தோசை மொறுமொறுன்னு கிரிஸ்ப்பியாக வருவதற்கு கால் கப் அளவிற்கு பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ரவை தோசை சுடுவதற்கு ஏற்றார் போல மெல்லிதாக தோசை வருவதற்கு கூடுதலாகவே தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதற்குள் சட்னி தயாரித்துக் கொள்ளுங்கள்.
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி அரைக்க முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சுவையில் தேங்காய் அரைக்க தேங்காயின் பின்பாகத் தோலை எடுத்து விட்டு அரைக்க வேண்டும். அதனால் துருவி கொள்வது நன்று. இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள் போதும்.
பின் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய், பூண்டு இரண்டு பல், அதே அளவிற்கு தோல் நீக்கிய இஞ்சி ரெண்டு துண்டு சேர்த்து, தோல் நீக்கிய ஐந்து சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஐந்தாறு புதினா இலைகளை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் இல்லை என்றால் மல்லித்தழைகளை சேர்க்கலாம். பின்னர் லேசான இனிப்பு சுவைக்கு கால் ஸ்பூன் சர்க்கரை போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிகவும் நைசாக அல்லாமல் கொரகொரவென்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிய விட்டு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு ட்ரிக்ஸ் தெரிஞ்ச போதும் பர்ஃபெக்ட்டான கேரள ஸ்டைல் அவியலை சுலபமாக செய்திடலாம். வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கிட்டு நீங்களும் இந்த அவியலை செஞ்சி அசத்துங்க.
அவ்வளவுதாங்க சூப்பரான ஹோட்டல் ஸ்டைலில் மிதமான காரத்துடன் லேசான இனிப்பு சுவையுடன் டேஸ்டியான வெள்ளை தேங்காய் சட்னி ரெடி! இப்போது ஊற வைத்துள்ள கம்பு தோசை மாவு லேசாக புளித்திருக்கும். அரை மணி நேரம் விட்டால் சரியாக இருந்திருக்கும். பின்னர் நீங்கள் தோசை கல்லை காய வைத்துக் கொள்ளுங்கள். கல் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கரண்டியால் நன்கு மாவை கலந்து அள்ளி எடுத்து சுற்றிலும் ஊற்ற வேண்டும். பிறகு விடுபட்ட இடங்களையும் நிரப்பிக் கொள்ளுங்கள். தோசை ரவை தோசைக்கு சுடுவது போல சுட வேண்டும். நடுப்புறம் அதே போல ஓட்டை ஓட்டையாக விழுகும். ஒருபுறம் நன்கு சிவக்க வெந்ததும், அப்படியே எடுத்து ஒருமுறை சுடச்சுட பரிமாற வேண்டியதுதான்! ஆரோக்கியம் நிறைந்த இந்த கம்பு தோசை ரெசிபி கண்டிப்பாக இந்த முறையில் எளிதாக வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!