எல்லா குழம்பிலும் கறி குழம்பு சாப்பிட்ட திருப்தி வந்துவிடுமா என்று கேட்டால், அது அசைவ பிரியர்களுக்கு நிச்சயமாக வராது. அசைவம் சாப்பிட முடியாத சூழ்நிலையில், காரசாரமாக சுவை தரும் ஏதாவது கிரேவி சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த கிரேவியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இட்லி, தோசை சப்பாத்தி பூரி சுட சுட சாதத்திற்கு கூட இது சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். 100% நம்பி செய்யுங்க. எந்த சொதப்பலும் இருக்காது. ஒரு காலிபிளவர் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை வைத்து இந்த கிரேவியை அழகாக செய்து முடித்து விடலாம்.
மீடியம் சைஸில் இருக்கும் ஒரு காலிபிளவரை வெட்டி சுடுதண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பல் 10, போட்டு வாசம் வரும் வரை வறுத்து அதன் பின்பு, ஓரளவுக்கு துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயம் 3, தக்காளி பழம் 2, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும்.
முக்கால் பாகம் இந்த பொருட்கள் எல்லாம் வாங்கினால் போதும். இதோட பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்குங்க. இறுதியாக முந்திரி பருப்பு 4 போட்டு அடுப்பை அணைத்து, இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுது போல நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, போட்டு தாளித்து தயாராக எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை இந்த எண்ணெயில் போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். எண்ணெயில் காலிபிளவர் ரோஸ்ட் ஆகும்போது, அதில் ஒரு நல்ல சுவை கிடைக்கும்.
அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை, கடாயில் ஊற்றி காலிஃபிளவரோடு நன்றாக கலந்து விடுங்கள். தேவையான அளவு உப்பு தூவி, மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா 1 ஸ்பூன், சேர்த்து கலந்து விடுங்கள். இந்த மசாலா காலிஃப்ளவரோடு ஒட்டி பிடிக்கட்டும்.
அதன் பின்பு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு மேலே கொத்தமல்லி இலைகளை தூவி, ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் காலிபிளவரை வேக வைத்தால் போதும். சூப்பரான காலிபிளவர் கிரேவி தயாராகிவிடும். இது செம்ம டேஸ்ட்டா இருக்கும். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.