சென்னா பிரியாணி செய்முறை

chena biriyani
- Advertisement -

பிரியாணி என்று சொன்னதும் பலரின் நாவிலும் எச்சில் ஊறும். எந்த வகையான பிரியாணியாக இருந்தாலும் அதை ஒரு கட்டு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தினமும் மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தால் போதும் வேறு எதுவுமே வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு ருசியான அதே சமயம் ஆரோக்கியமான சென்னா பிரியாணி செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

சென்னா என்று அழைக்கக்கூடிய கொண்டைக்கடலையில் போலிக் அமிலம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதச்சத்து, விட்டமின்கள், சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கொண்டைக்கடலையை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது மாரடைப்பு, சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது. சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றை குறைக்கிறது. நினைவாற்றலையும், ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வெள்ளை கொண்டை கடலை – 1/2 கப்
  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பிரியாணி இலை – 1
  • கல்பாசி – 1/4 ஸ்பூன்
  • அண்ணாச்சி பூ – 2
  • முந்திரி – 10
  • புதினா – ஒரு கைப்பிடி
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 1
  • இஞ்சி – 1 இன்ச்
  • பூண்டு – 8 பல்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பட்டை – 2
  • ஏலக்காய் – 1
  • கிராம்பு – 2
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • தண்ணீர் – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைத்து விட வேண்டும். குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு குக்கரில் வைத்து ஏழு விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, கல்பாசி, அண்ணாச்சி பூ போன்றவற்றை போட வேண்டும். பிறகு இதில் முந்திரி, புதினா இரண்டையும் சேர்த்து முந்திரி லேசாக சிவந்த பிறகு அதில் நீல வாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்க வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக அரைந்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை குக்கரில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் தனியாக பிரிந்து வரும் அளவிற்கு வதக்க வேண்டும். பிறகு வேக வைத்திருக்கும் கொண்டை கடலையை சேர்த்து அதனுடன் தண்ணீரை ஊற்ற வேண்டும். பாஸ்மதி அரிசியை 20 நிமிடத்திற்கு முன்பாகவே கழுவி ஊறவைத்து விட வேண்டும். இப்பொழுது தண்ணீர் லேசாக கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை போட்டு ஒரு கிளறு கிளறி விட்டு சிறிது புதினா இலையை தூவி விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.

குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். விசில் போனதும் குக்கரின் மூடியை திறந்து அதில் நெய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி பரிமாறலாம். சுவையான சென்னா பிரியாணி தயார் ஆகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான வாழைத்தண்டு சட்னி செய்முறை

பல வகை பிரியாணிகள் இருந்தாலும் மிகவும் எளிதில் அதே சமயம் சத்து மிகுந்ததாகவும் திகழக்கூடிய இந்த சென்னா பிரியாணியை செய்து தருவதன் மூலம் நம்முடைய வேலை நேரமும் மிச்சமாகும். அதே சமயம் ஆரோக்கியமும் கிடைக்கும்.

- Advertisement -