ஆரோக்கியமான வாழைத்தண்டு சட்னி செய்முறை

banana stem chutney
- Advertisement -

நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்தாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளே திகழ்கின்றன. அதை முறையாக கவனித்து உண்டோம் என்றால் நோயற்ற வாழ்வை நம்மால் மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு மருந்தாக திகழ்வதுதான் வாழைத்தண்டு. இதை கூட்டாகவும், பொரியலாகவும் செய்து தரும் பொழுது பலரும் சாப்பிடுவது கிடையாது. அதற்கு பதிலாக வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த வாழைத்தண்டை வாரத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது சிறுநீரக கற்கள் கரைகிறது. ரத்த சர்க்கரையின் அளவு குறைகிறது. உயர் ரத்த அழுத்தம் சீராகிறது. உடல் எடை குறைப்பதற்கு பெரிதும் துணை புரிகிறது. மேலும் மலச்சிக்கல் நீங்கவும், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இது பெருந்துணை புரிகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வாழைத்தண்டு – 1/4 கிலோ
  • கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
  • சின்ன வெங்காயம் – 20
  • தக்காளி – 1
  • பூண்டு – 15 பல்
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு உளுந்து – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 3 கொத்து
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பையும் உளுந்தப் பருப்பையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். இவை சிவந்த பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டு காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து அதையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு அதில் தக்காளியை போட்டு வதக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு புளி, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை இரண்டு கொத்து, கொத்தமல்லித்தழை இவை அனைத்தையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நன்றாக ஆர வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து முதலில் நாம் வருத்த பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து ஒரு முறை பல்ஸ் மோடில் வைத்து பிறகு வதக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை அதில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைத்தால் தான் வாழைத்தண்டு அனைத்தும் முழுதாக அவையும்.

அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த இந்த சட்னியை மாற்றி வைத்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்றார் போல் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். இப்பொழுது ஒரு தாலிக்கும் கரண்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகுளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அந்த சட்னியில் ஊற்றி விட வேண்டும். மிகவும் ஆரோக்கியமான வாழைத்தண்டு சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சேமியா அடை தோசை செய்முறை

எப்படி இருந்தாலும் டிபன் செய்யும் பொழுது அதற்காக நாம் சட்னி கண்டிப்பான முறையில் செய்வோம். அப்படி செய்யும் பொழுது இந்த மாதிரி ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -