செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி குழம்பு இப்படி செய்து ருசித்துப்பாருங்கள். ஒரு வாரத்திற்கு இந்த சுவையை உங்களால் மறக்கவே முடியாது.

- Advertisement -

செட்டிநாடு ஸ்டைலில் ஒரு தக்காளி குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தக்காளி குழம்பு செய்ய சூப்பரான ஒரு ஸ்பெஷல் பொடியை வறுத்து அரைகப் போகின்றோம். இந்த பொடி போட்டு குழம்பு வைத்தால் அத்தனை ருசியாக மணக்க மணக்க இந்த குழம்பு நமக்கு கிடைக்கும். இட்லி தோசை சுட சுட சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த சைடிஷ் அருமையாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் இந்த ஸ்பெஷல் ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுபட்ட இந்த மூன்று பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பூண்டு – 15 பல், இந்த பொருட்களை போட்டு தாளித்து, அதன் பின்பு பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 2 சேர்த்து, வெங்காயம் பிரவுன் கலர் வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி பழம் – 5, போட்டு தக்காளி பழம் குழைய குழைய வதக்க வேண்டும். ஒரு மூடி போட்டு கூட தக்காளியை சாப்டாக 2 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். (1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்திற்க்கு, 2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சரியான அளவாக இருக்கும். நாட்டு தக்காளியில் இந்த குழம்பை வைத்தால் இன்னும் சுவை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

தக்காளி நன்றாக வெந்து குழைந்து வந்தவுடன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் – 2 ஸ்பூன், சோம்பு தூள் – 1/2 ஸ்பூன் இந்த எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் போல பச்சை வாடை போக வதக்கு வதக்கி விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை இதோடு சேர்த்து விடுங்கள். மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, இந்த குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மீடியம் ஃபிலிமில் வைத்துவிட்டு ஒரு மூடி போட்டு குழம்பை தளதளவென கொதிக்க வைக்க வேண்டும்.

உங்களுக்கு திக்காக இந்த கிரேவி தேவை என்றால் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் பதத்தில் வேண்டுமென்றால் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான். குழம்பு 2 லிருந்து 3 நிமிடங்கள் கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். தேவைப்பட்டால் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள். செட்டிநாடு தக்காளி குழம்பு தயார்.

- Advertisement -