கமகமக்கும் செட்டிநாடு கார சாரமான கார சட்னி இப்படி செஞ்சு பார்த்திருக்கிறீர்களா? சட்டுனு 10 நிமிடத்தில் செஞ்சி பாருங்க இனிமே அடிக்கடி செய்வீங்க!

chettinadu-kara-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகள் இருக்கும் போதும் கார சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். முறுகலான தோசை உடன் கொஞ்சம் கார சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். செட்டிநாடு பகுதிகளில் கிடைக்கக் கூடிய இந்த காரச்சட்னி எளிமையாக நாமும் நம் வீட்டிலேயே செய்து காட்டலாம். கமகமக்கும் செட்டிநாடு கார சாரமான கார சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

செட்டிநாடு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 3, வர மிளகாய் – 15, இஞ்சி – ஒரு விரல் துண்டு, பூண்டு பற்கள் – 15, கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செட்டிநாடு கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து வதக்குங்கள். அதன் பிறகு காரத்திற்கு காய்ந்த மிளகாய் போட்டு கொள்ளுங்கள். நீட்டு மிளகாய் ஆக இல்லாமல் குண்டு மிளகாய்களாக போட்டுக் கொள்வது ரொம்பவே சூப்பராக இருக்கும்.

அதன் பின்பு இரண்டு கொத்து கறிவேப்பிலையை பச்சையாக உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்ட பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதங்கியதும், அதில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிய வதக்க வேண்டும். அதுவரை சிறிதளவு உப்பு போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து வதக்குங்கள். பின்னர் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இந்த பச்சை வாசம் போக நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்னர் இரண்டு வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை கொஞ்சம் சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் ரொம்பவே அற்புதமான சுவையுள்ள செட்டிநாடு கார சட்னி தயார்! இதே முறையில், இதை அளவுகளில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -