நாவில் நீர் சொட்ட சொட்ட வீடே மணமணக்கும் செட்டிநாட்டு மிளகு குழம்பு செய்வது எப்படி?

milagu
- Advertisement -

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ உடனே இந்த மிளகு குழம்பை ட்ரை செய்து பார்க்கலாம். எங்கேயாவது வெளியூருக்கு பயணம் செய்யப் போவதாக இருந்தாலும் இந்த மிளகு குழம்பினை உடன் எடுத்துச் செல்லலாம். நான்கு நாட்கள் ஆனாலும் வீணாகாமல் இருக்கும். மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவுப் பொருளான மிளகு, சளி இருமல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவ்வாறு பல வழிகளில் பலன் தரக்கூடிய இந்த மிளகினை வைத்து செய்யக்கூடிய சுவையான செட்டிநாடு குழம்பினை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

milagu

தேவையான பொருட்கள்:
மிளகு ஒரு – 1 ஸ்பூன், தனியா –1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 2, சீரகம் – அரை ஸ்பூன், தேங்காய்துருவல் – 2 ஸ்பூன், புளி – எலுமிச்சம்பழ அளவு,
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – ஒன்று, உப்பு – ஒரு ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புளியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

onion-cutting

அதன் பின் அடுப்பைப் பற்ற வைத்து சிறிய தீயில் வைத்துக் கொண்டு, அதன் மீது கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மற்றும் வர மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை தனியாக எடுத்துக்கொண்டு, அதே கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து அதனையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஊற வைத்துள்ள புளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொண்டு அதனுடன் வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

thalipu

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கிளறி விட்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இவை நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்ந்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் இவற்றிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை சிறிய தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இழைகளை தூவ வேண்டும்.

milagu-kozhambu

அவ்வளவுதான் செட்டிநாட்டு சுவையில் சுவையான மிளகு குழம்பு தயாராகிவிட்டது. சுடசுட சாதத்துடன் இந்த மிளகு குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். வாயில் இறங்கும் பொழுது நாவில் எச்சில் ஊறிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -