இப்படி ஒரு அசத்தலான செட்டிநாட்டு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்

seeyam
- Advertisement -

செட்டிநாடு ஸ்பெஷல்  கார சீயம்  அரிசி, உளுந்து ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி.  அரிசி, உளுந்தை ஊறவைத்து, அரைத்து உடனே  செய்யலாம், பொதுவாக கார சீயம் விரத நாட்களில் செய்து  சாப்பிடப்படுகிறது. கார சீயத்துடன் அதற்கேற்றார் போல் ஓர் அருமையான சட்னியும் இதனுடன் பதிவிட்டுள்ளேன், நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து – 1 கப், பச்சரிசி – 1 கப், சமையல் எண்ணெய் – 1ஸ்பூன், கடுகு  – 1/4 1ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1, உப்பு – 1ஸ்பூன், சமையல் எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 3, எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிது, பூண்டு பற்கள் – 6, பெரிய  வெங்காயம் – 1, உப்பு – 1ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4  1ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,

செய்முறை:
ஒரு பாத்திரத்தில்  1 கப் வெள்ளை உளுந்து சேர்த்து கொள்ளவும். அதனுடன் 1 கப் பச்சரிசி சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து ஒரு முறை  அலசிய பின்னர்,  தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கலாம். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/4 ஸ்பூன் கடுகு மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

கடுகு உளுத்தம்பருப்பு பொரிந்த பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய்  மற்றும் 1பெரிய  வெங்காயம்  ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் தாளித்த கலவையை அரைத்துவைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு வாணலியில்  சீயம்  பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் தயாராக வைத்துள்ள மாவை போண்டா போடுவது போன்று சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும். மிதமான தீயில் வைத்து அவ்வப்போது திருப்பி போடவும்.எல்லா பக்கமும் பொன்னிறமானதும் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.

சட்னி செய்முறை: 
ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளிகளை காம்பை வெட்டி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும் .ஒரு வாணலியில் 3 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/4 ஸ்பூன் கடுகு, 1/2 உளுத்தம் பருப்பு,  சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு பொரிந்த பின்னர், 6 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். பூண்டு மற்றும் வெங்காயம் மென்மையாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும். ஒரு கொதி வந்த பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். 2 ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும். இதனை மூடி வைத்து மிதமான தீயில் அல்லது குறைவான தீயில் 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். ஓரங்களில் எண்ணெய்  பிரிந்து வருவதை பார்க்கலாம்,  சுவையான சட்னி  தயார்.

- Advertisement -