மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமி நாட்களை விட, இந்த சித்ரா பௌர்ணமி நாளுக்கு அதீத சக்தி உண்டு. இந்த சித்ரா பௌர்ணமி நாளில் எந்தெந்த தெய்வங்களுக்கு எல்லாம் விசேஷம், எந்தெந்த தெய்வங்களை எந்த முறையில் வழிபாடு செய்தால் நமக்கு உண்டான பலன் கை மேல் கிடைக்கும், ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
முதல் வழிபாடு
சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தன் வழிபாடு செய்வது சிறப்பு. இந்த பௌர்ணமி நாளில் தான் சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் திருமண வைபவம் நடக்கும். வாழ்க்கையில் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் கஷ்டப்படுபவர்கள், நாளைய தினம் கட்டாயம் சித்திரகுப்தனை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் காஞ்சிபுரத்திற்குச் சென்று சித்திரகுப்தனை நேரில் தரிசனம் செய்தால், வாழ்க்கையில் எந்த திசையில் சென்றால், சீக்கிரம் முன்னேறுவதற்கு உண்டான வழி கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். ஆகவே நாளைய தினம் வரக்கூடிய இந்த அதிசக்தி வாய்ந்த நாளில், யாரும் சித்திரகுப்தனை மனதார நினைத்து தவற விடாதிங்க. உங்கள் தலை எழுத்தை மாற்ற நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான வழிபாடு சித்திரகுப்தர் வழிபாடு. மனதிற்குள் சித்திரகுப்தனை நினைத்து செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் அந்த பாவங்களை செய்யாமல் பார்த்துக் கொண்டாலே வாழ்க்கையில் நல்லது நடந்து விடும்.
இரண்டாவது வழிபாடு
சில பேருக்கு குலதெய்வ வழிபாடு செய்வதில் தடை இருக்கும். குலதெய்வத்தின் சாபம் இருக்கும். குடும்பத்திற்கு குலதெய்வத்தால் நன்மை என்பதை நடக்காது. இதுபோல பிரச்சனை இருந்தால் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று பொங்கல் வைத்து, அந்த கோவிலிலேயே அமர்ந்து நிலவு வெளிச்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த பொங்கலை சாப்பிட, குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை செய்தால் குடும்பத்தில் இதுவரை நடக்காத நல்லது கூட இனிவரும் நாட்களில் நடக்கும்.
மூன்றாவது வழிபாடு
சித்ரா பௌர்ணமி அன்று நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து எந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்தாலும் அது உங்களுக்கு உடனடியாக சித்தி ஆகும். சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் ஒரு மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால், அந்த மந்திரத்தை ஆயிரம் முறை உச்சரித்த பலனை உங்களால் பெற முடியும். உங்களுக்கு எந்த கடவுள் வசியமாக வேண்டுமோ. அந்த கடவுளை நினைத்து மந்திரத்தை உச்சாடனம் செய்யலாம்.
நான்காம் வழிபாடு
எந்த நல்ல நாளாக இருந்தாலும், அன்னதானம் செய்வது நமக்கு பெரிய அளவில் புண்ணியத்தை கொடுக்கும். அந்த வகையில் இந்த சித்ரா பௌர்ணமி நாளில், உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள். பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும், ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி, வெல்லம் கலந்து ஒரு மரத்திற்கு அடியில் வைத்து விட்டு வர, வாழ்க்கையில் இருக்கும் பெரிய துன்பத்திற்கு கூட எளிமையான ஒரு தீர்வு கிடைக்கும்.
ஐந்தாவது வழிபாடு
பௌர்ணமி திதி என்றாலே சத்ய நாராயண பூஜை செய்வது சிறப்பு. தீராத கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள் உங்களுடைய வீட்டிலேயே நீங்கள் சத்திய நாராயண பூஜை செய்து கொள்ளலாம். வசதி இல்லை என்பவர்கள் வீட்டு பக்கத்தில், பெருமாள் கோவிலில் நடக்கும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அதேபோல ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள், இந்த பௌர்ணமி நாளில், சந்திர பகவானையும் சித்திரகுப்தனையும் வழங்குவது அதிசிறந்த பலனை கொடுக்கும். பௌர்ணமி என்றாலே ஈசனும் அம்பாளும் தான் நம் நினைவுக்கு வரும்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட குலதெய்வ பரிகாரம்
ஆகவே இந்த நாளில் ஈசனையும் அம்பாளையும் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும். மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் ஒருவரால் செய்ய முடியாது. உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவை, உங்களுக்கு தற்போது இருக்கும் கஷ்டம் என்ன. அதை நிறைவேற்றிக் கொள்ள மேல் சொன்ன விஷயங்களில், உங்களால் முடிந்ததை கடைபிடித்தாலே நன்மை நடக்கும் என்ற இந்த தகவலுடன், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.