1 கப் கோதுமை மாவு இருந்தா இப்படி வித்தியாசமான டிபன் செய்து தரலாம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்களே!

stuffed-chappathi1
- Advertisement -

கோதுமை மாவு மசாலா ஸ்டஃப்டு சப்பாத்தி தேங்காய் சேர்த்து வித்தியாசமான சுவையுடன் இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால் அனைவரும் உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வதற்கும் ரொம்ப சுலபம் தான். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை, அப்படியே சாப்பிட்டு விடலாம் என்பதால் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த மசாலா ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படி செய்வது? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

wheat-flour

கோதுமை ஸ்டஃப்டு செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப்.

- Advertisement -

கோதுமை ஸ்டஃப்டு செய்முறை விளக்கம்:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.

thakkali-thokku4

இவற்றின் பச்சை வாசம் போனதும் கறிவேப்பிலை ஒரு கொத்து, நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் கால் கப் அளவிற்கு தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக கோதுமை மாவுடன் ஸ்டஃப் செய்வதற்கு உருளைக்கிழங்கு, முட்டை போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு. ஆனால் தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு சப்பாத்தி வித்தியாசமான சுவையுடன் ரொம்பவே சூப்பராக இருக்கும். இரண்டு நிமிடம் நன்கு வதங்கியதும் பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அரை கப் அளவிற்கு சுடு தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இந்த மாவை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை, உடனடியாக சட்டென செய்து விடலாம். சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனை சப்பாத்தி போல தேய்த்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஸ்டஃப்டு மசாலாவை உள்ளே வைத்து எல்லா முனைகளிலும் ஓரிடத்தில் குவித்து அழுத்தம் கொடுத்து மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

stuffed-chappathi

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான ஸ்டஃப்டு மசாலா சப்பாத்தி ரெடி. வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த ஸ்டஃப்டு சப்பாத்தி அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -