குக்கரில் வெறும் ஒரே 1 விசில் விட்டால் போதும். கமகம வாசத்துடன் சூப்பர் சால்னா தயார். பரோட்டா, பூரி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ்.

parotta kuzhambu
- Advertisement -

கமகமன்னு அசைவ வாசத்தோடு அசத்தலான ஒரு சால்னா ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சால்னா என்று சொன்னாலே அதை கடையில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். அதிலும் குறிப்பாக இப்படி குக்கரில் செய்தால் ஒரே ஒரு விசிலில், சால்னா தயாராக நமக்கு கிடைக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

ஒரு சின்ன கிண்ணத்தில் முந்திரி பருப்பு 6, கசகசா 1/2 ஸ்பூன் போட்டு கொஞ்சமாக சுடுதண்ணீர் ஊற்றி இதை 15 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/4 கப், சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 10, சோம்பு – 1/2 ஸ்பூன், ஊறவைத்த முந்திரி கசகசாவை தண்ணீரோடு ஊற்றி இதை விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் திப்பி திப்பியாக அரைபடக்கூடாது. நைசாக அரைந்திருக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2, ஏலக்காய் – 2, கல்பாசி – சிறிய துண்டு, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, இதை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாடை நீங்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, போட்டு தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விட வேண்டும். (தக்காளி பழம் கண்ணுக்கு தெரியவே கூடாது.) அடுத்து மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சிக்கன் மசாலா தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இந்த மசாலாவை எண்ணெயிலேயே வதக்கி விடுங்கள். அடுப்பை கட்டாயம் சிம்மில் வைத்துவிட்டு தான் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். (சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, கறி மசாலா எந்த மசாலாத்தூளாக இருந்தாலும் ஒரு ஸ்பூன் கட்டாயம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சால்னா வாசம் சூப்பராக இருக்கும்.)

அடுத்தபடியாக மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, புதினா – 1/2 கைப்பிடி அளவு, போட்டு லேசாக இரண்டு வதக்கு வதக்கி விட வேண்டும். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதில் ஊற்றி சால்னாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரே ஒரு விசில் விட்டால் போதும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறக்க வேண்டும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்து இதை இரண்டு நிமிடம் போல கொதிக்க வைக்கும் போது இதனுடைய சுவை இன்னும் கொஞ்சம் கூடும். இது ஒரு சின்ன ட்ரிக் தான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறி பாருங்கள். அடடா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -