கடலைப்பருப்புடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வடை செய்து பாருங்கள். எப்பொழுதும் செய்யும் மசால் வடையை விட இதன் சுவை சற்று வித்தியாசமாக அசத்தல் சுவையுடன் இருக்கும்

vadai
- Advertisement -

வீட்டில் உள்ளவர்கள் டீ குடிக்கும் நேரத்தில் அதனுடன் ஏதேனும் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று கேட்கும் நேரத்தில் உங்கள் வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும். அதனை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான மசால் வடையை செய்து கொடுக்க முடியும். எப்பொழுதும் கடலைப் பருப்பை வைத்து மட்டும் தான் வடை செய்திருக்கிறோம். ஆனால் திடீரென வடை செய்ய நினைக்கும் பொழுது வீட்டில் கடலைப் பருப்பின் அளவு குறைவாக இருந்ததென்றால் இந்த மீல்மேக்கர் எடுத்துக்கொண்டு, அதனை வைத்து சுவையான வடை செய்ய முடியும். இந்த மீல்மேக்கர் வடையின் சுவை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எவருக்கும் வேண்டாம். இதை சுவைத்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் அதன் அருமையான ருசி. வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 50 கிராம், கடலைப்பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம் – 2, வரமிளகாய் – 4, இஞ்சி சிறிய துண்டு – 1, சோம்பு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை கப் கடலைப் பருப்பை கழுவி, தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின்னர் மீல்மேக்கரையும் இரண்டு முறை நன்றாகக் கழுவி, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஊறவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு இஞ்சி, வர மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இதனை வேறு ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு 3 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து, இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, வடை தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மீல்மேக்கர் வடை தயாராகிவிட்டது. இதனுடன் சாஸ் அல்லது சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இல்லை அப்படியே சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -