அதிஷ்ட நேரத்திற்கு சொந்தமான குளிகனை பற்றிய விவரங்கள்

money-1

குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்கத்தான் உருவானது. ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத சூலியாக இருந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தார். யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று யோசனை சொன்னார்.

அவ்வளவுதான், நவக்கிரகங்களையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப்போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்துகொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலைகொண்டனர்.

navagragam

இதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில்கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவகிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர்.

- Advertisement -

இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம்’’ என்றார்.

navagragam

அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்து அவனுக்கு `மேகநாதன்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்திவைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார்.

`குளிகை நேரம்’ என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், `காரிய விருத்தி நேரம்’ என ஆசீர்வதிக்கவும்பட்டது. இதனாலேயே இந்த நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்று கூறப்பட்டது.

clock

குளிர்விக்கும் தன்மையைக்கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான். குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.