- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதன்வந்திரி ஜெயந்தி வழிபாடு

தன்வந்திரி ஜெயந்தி வழிபாடு

- Advertisement -

எவ்வளவுதான் பணம் இருந்தாலும், சொத்து இருந்தாலும், நகை இருந்தாலும் ஆரோக்கியம் என்ற ஒன்று இல்லை என்றால் இவை அனைத்தும் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றே கூற வேண்டும். பலரும் பல வருடங்களாக நோய்வாய் பட்டு இருப்பார்கள். ஒரு சிலர் படுத்த படுக்கையிலேயே இருப்பார்கள். இன்னும் சிலருக்கோ தங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை மருத்துவராலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதும் உண்டு. கேள்விப்படாத நோய்களின் பெயரைக் கூறி அந்த நோயின் தாக்குதலால் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் அவர்களுடைய வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சூழ்நிலையோடு தினமும் அந்த நோயின் தாக்கத்தால் மனவருத்தமும் உடல் வருத்தமும் ஏற்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்வதற்கும் புதிதாக எந்தவித நோயின் தாக்குதலும் ஏற்படாமல் இருப்பதற்கும் தன்வந்திரி ஜெயந்தி அன்று செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்டோபர் மாதம் 29ஆம் நாள் தன்வந்திரி ஜெயந்தி என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் தன்வந்திரி அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தார்கள் அப்படி கடையும் பொழுது அந்த திருப்பாற்கடலில் இருந்து பல பொருட்கள் தோன்றின. மகாலட்சுமி, சந்திர தேவர், காமதேனு, அக்ஷய பாத்திரம், கற்பகவிருட்சம் இப்படி பல தோன்றியது. அந்த வரிசையில் தோன்றியவர் தான் தன்வந்திரி. இவருடைய கையில் தான் அமிர்த கலசம் இருந்தது. அந்த அமிர்த கலசத்திற்காக தான் திருப்பாற்கடலையே கடைந்தார்கள்.

- Advertisement -

தன்வந்திரி பெருமாளின் மறு அவதாரமாக கருதப்படுகிறார். அதனால் இவரிடம் சங்கு சக்கரம் இரண்டும் இருக்கும். இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்று கூறுவார்கள். எப்பேர்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோயிலிருந்து விடுபடுவதற்குரிய மருந்து இவரிடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தன்வந்திரியை தன்வந்திரி ஜெயந்தி அன்று நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு கஷ்டம் கொடுத்து கொண்டு இருக்கும் உடல் நலக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த தன்வந்திரி வழிபாட்டை மாலை 6 மணிக்கு மேல் அதாவது பிரதோஷம் முடிந்த பிறகு தான் செய்ய வேண்டும். வீட்டில் தன்வந்திரியின் படம் இருக்கும் பட்சத்தில் அதை துடைத்து சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தன்வந்திரியின் படம் இல்லாத பட்சத்தில் பெருமானின் படத்திற்கு முன்பாகவும் நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளலாம். பிறகு ஒரு சுத்தமான டம்ளரில் குடிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து, அதில் இரண்டு துளசி இலைகளை போட்டுக்கொண்டு தன்வந்திரி பகவானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை பதினாறு முறை கூறவேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை தன்வந்திரி ஜெயந்தி அன்று மட்டும்தான் கூற வேண்டும் என்று இல்லை தினமும் காலையிலோ, மாலையிலோ 27 முறை உச்சரித்தால் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் எந்த வித நோயின் தாக்குதலும் உண்டாகாது, ஆரோக்கியமாக திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்த பிறகு அந்த தண்ணீரை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தர வேண்டும். வீட்டில் யாரும் அப்படி இல்லை என்னும் பட்சத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தீர்த்தமாக அதை தர வேண்டும்.

மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய வினாசாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணுவே நம

இதையும் படிக்கலாமே:29-10-2024 செவ்வாய் பிரதோஷ வழிபாடு
இந்த மந்திரத்தை முழு மனதோடு தன்வந்திரியை நினைத்துக் கொண்டு தன்வந்திரி ஜெயந்தி அன்றோ அல்லது தினமுமோ கூறுபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்