தோசை கல்லில் தோசை வரவே இல்லையா? அடிக்கடி ஒட்டிக்கொண்டே இருக்கிறதா? இதை செய்து பாருங்கள் பிறகு தோசை மொறுமொறுவென அருமையாக வரும்.

dosa-tawa
- Advertisement -

அந்த காலம் முதல் இன்றைய காலம் வரை நாம் அன்றாட உண்ணும் சிற்றுண்டிகளில் முதலிடத்தைப் பெறுவது இட்லி,தோசை தான். இதிலும் இட்லியை விட நாம் அதிகம் தோசையை தான் விரும்புவோம். சுவையிலும், செய்யும் நேரத்திலும், வேலையிலும், அனைத்திலுமே சுலபமாக செய்யக்கூடிய ஒன்று இந்த தோசை தான். தற்போது எல்லோரும் நான்ஸ்டிக் தவா உபயோகப்படுத்தி தான் தோசை ஊற்றி வருகின்றனர். காரணம் விலை ஒரு புறம் இருந்தாலும் இதில் தோசை ஊற்றுவது என்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. பெரிதாக பாரமரிக்கவும் தேவை இல்லை.

இது ஒரு புறம் இருந்தாலும், இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் தோசை கல்லை வாங்கி அதில் தோசை ஊற்ற வேண்டுமானால் அதற்கு 8 மணி நேரம் முதல் சிலர் ஒரு நாள் முழுவதும் கூட சாதம் வடித்த கஞ்சி ஊற்றியும், வேறு சில வழிமுறைகளை செய்தும் பழக்க வேண்டும். அப்படி பழகினாலும் சரியான முறையில் தோசை ஊற்ற வருவதில்லை என்பது தான்.

- Advertisement -

அப்படி தோசை கல்லை பழக்குவதற்கான நேரமும், சூழ்நிலையும் இப்போதைய காலக்கட்டத்தில் முடியாத ஒன்று தான். அதனாலேயே ஆரோக்கியத்திற்கு கேடு என தெரிந்தும் அனைவரும் நான்ஸ்டிக் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரும்புக் கல்லை பழக்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, வாங்கிய பத்தே நிமிடத்தில் கல்லை பழக்கி தோசை உற்றவும் ஆரம்பித்து விடலாம், என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

புதிதாக நாம் வாங்கும் தோசை கல்லை கொண்டு நேரடியாக அடுப்பில் வைத்து தோசை ஊற்ற ஆரம்பித்து விடலாம் அதற்கு மிக மிக எளிய வழிமுறை உள்ளது. அதை பின்பற்றினாலே போதும் நிமிடத்தில் சூப்பரான மொறு மொறு தோசை உங்களுக்கு கிடைத்துவிடும். முதலில் தோசை கல்லை வாங்கிய உடன் அதன் மேலிருக்கும் தூசு தும்பு போக நன்றாக தேய்த்து விடுங்கள். ஸ்க்ரப்பர் உபயோகப்படுத்த வேண்டாம், தேங்காய் நாரோ, இல்லை காட்டன் துணி ஏதுவாக இருந்தாலும் சரி, அதை வைத்து நீங்கள் உபயோகப்படுத்தும் எந்த சோப்பு, லிக்விட் எதுவாக இருந்தாலும் போட்டு கல்லை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் அந்தக் கல்லை நேரடியாக அடுப்பில் வைத்து நன்றாக சூடுப்படுத்திக் கொள்ளுங்கள் அதில் சிறிதளவு நல்லெண்ணெயோ விளக்கெண்ணெயோ இரண்டில் எந்த எண்ணெய் இருக்கிறதோ அதை தோசை கல்லில் கொஞ்சமாக ஊற்றி வெற்றிலை இருந்தால் அதன் மேல் ஒன்று போட்டு விடுங்கள். எண்ணெயில் அந்த வெற்றிலை நன்றாக சூடானதும், அதற்கு மேல் இன்னொரு வெற்றிலையும் போட்டு விடுங்கள்.

இதை செய்யும் போது ஸ்பூன் அல்லது முள்ளு கரண்டி ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் தோசை கல் மிகவும் சூடாக இருக்கும். இந்த வெற்றிலையை கல்லின் எல்லாப்புறமும் நன்றாக தேய்த்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். வெற்றிலையில் உள்ள சாறு எல்லாம் அந்த எண்ணெயில் கலந்து இருக்கும். பின் கல்லின் மேல் அனைத்து பக்கத்திலும் பரவும் படி இந்த வெற்றிலையை ஸ்பூன் கொண்டு தேய்க்க வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் துடைத்து விட்டு நீங்கள் எப்போதும் போல் தோசை உற்ற ஆரம்பிக்கலாம். ஒட்டாமல் மெலிதாக மொறு, மொறு தோசை ஊற்ற வரும். வெற்றிலை இல்லை என்றால் இதே முறையில் வாழை இலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தோசை கல் அகலத்திற்கு வாழை இலையை கட் பண்ணி தோசை கல் மீது வைத்து சூடாகி தேய்த்துக் கொள்ளலாம்.

அதேபோல் சிலர் பழைய கல்லிலும் தோசை உற்ற வரவில்லை என்று நிறைய வீடுகளில் தூக்கி எறிந்து விடுகிறார்கள். பழைய கல்லில் தோசை ஊற்றுவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல, பழைய கல் என்றால் அனைத்து பக்கங்களும் துரு ஏறி இருக்கும். முதலில் அதை நன்றாக தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பில் மீது வைத்து கல்லை நன்றாக சூடாக்கி அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி சூடானதும் அதில் வினிகர், உப்பு, எலுமிச்சை எதுவாக இருந்தாலும் சரி போட்டு நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.

இதை எல்லாம் செய்யும் போது தோசை கல் சூடாக இருக்க வேண்டும். இது தேய்க்கும் போது கையில் சூடு படாமல் கவனமாக அதற்கேற்றவாறு தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாக கழுவிய பின் தோசை கல்லில் ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி சிறிது எண்ணெய் தேய்த்து தோசை கல் முழுவதும் தேய்த்து விட்டு பின் தோசை ஊற்றுங்கள். இப்போது தோசை ஒட்டாமல் நன்றாக வரும். வெங்காயத்திற்கு பதில் கத்திரிக்காயும் பயன்படுத்தலாம். இந்த எளிய வழிகளை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -