பாயாசத்திற்கு போடுற ‘காய்ந்த திராட்சை’ இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே எப்படி திராட்சையை முறையாக உலர வைப்பது?

grapes-dry
- Advertisement -

வீட்டில் விசேஷம் என்றால் முதலில் பாயாசத்துடன் கொஞ்சம் கிஸ்மிஸ் பழம் என்கிற இந்த உலர் திராட்சையைப் போட்டு கொடுப்பது வழக்கம். அது மட்டுமல்லாமல் எல்லா பண்டிகைகளிலும் முக்கியமாக இடம்பெறும் சர்க்கரை பொங்கலிலும் அதிகமாக சேர்க்கப்படும் இந்த உலர் திராட்சையில் நிறைய சத்துக்கள் உண்டு. இது ரத்த சோகையை குணப்படுத்தும் அற்புதமான ஆற்றல் படைத்தது.

இதை கடைகளில் காசு கொடுத்து வாங்கி கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல! ஆனால் வீட்டிலேயே இப்படி எளிமையான முறையில் தயாரித்தால் செலவும் குறைவாகும். மேலும் நல்ல தரமான உலர் திராட்சைகளும் நமக்கு கிடைக்கும். இதை வருடக் கணக்கில் வைத்து சேகரிக்கவும் முடியும். அதை எப்படி வீட்டிலேயே உலர வைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

உலர் திராட்சையில் பச்சை திராட்சையை விட, விதை உள்ள கருப்பு திராட்சையில் நிறைய சத்துக்கள் உண்டு. இதை உலர வைத்து, நீங்கள் தினமும் இரவில் தண்ணீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் சேர்த்து பருகினால், உங்களுடைய ரத்த சோகை நோய் விரைவாக குணம் அடையும். மேலும் உங்களுடைய ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயர்ந்து விடும். கர்ப்பிணி பெண்கள், ரத்தசோகை நோய் உடையவர்கள், பலவீனமாக இருப்பவர்கள் இப்படி உலர் திராட்சையை அடிக்கடி எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

உங்களுக்கு விருப்பமான திராட்சை வகையை விதைகள் இல்லாமல் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விதைகளுடன் சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. விதைகள் இல்லாத இந்த திராட்சையில் இருக்கும் காம்புகளை எல்லாம் நன்கு நீக்கி விட்டு, ஓரிரு முறை நன்கு தண்ணீர் ஊற்றி அலசி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடைசியாக கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு தேய்த்து எடுத்தால் ரசாயன பூச்சிக் கொல்லிகளால் வளர்க்கப்பட்ட திராட்சையில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்கம் நீங்கி விடும். அதன் பிறகு நீங்கள் தண்ணீரை வடிகட்டி உலர்வாக எடுத்து வையுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து எட்டிலிருந்து பத்து நிமிடம் வரை நன்கு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவித்து எடுத்த பின்பு திராட்சை பழத்தின் நிறம் மாறி இருக்கும். அதன் பிறகு இதை வெயிலில் ஒரு வாரம் வரை நன்கு உலர வைக்க வேண்டும். வருடக் கணக்கில் கெட்டுப் போகாமலிருக்க கண்டிப்பாக வெயிலில் தான் நீங்கள் உலர வைக்க வேண்டும், நிழலில் கூடாது. வெயில் நன்கு படும் இடங்களில் சுத்தமான துணியை விரித்து அதில் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் தனித்தனியாக வையுங்கள்.

பிறகு மறுநாள் அந்த திராட்சை பழத்தை திருப்பி போடுங்கள். இப்படி ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை நன்கு உலர வைத்தால் சூப்பரான உலர் திராட்சைகள் உங்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் எளிதான முறையில் ரெடி ஆகிவிடும். இதை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் வருடக் கணக்கில் உங்கள் தேவையின் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -