சிறுவயதில் விரும்பி சாப்பிட்ட தேங்காய் பர்பி ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? நவூரும் தேங்காய் பர்பி செய்முறை!

coconut-burfi-paagu
- Advertisement -

சிறுவயதில் 80 மற்றும் 90களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த தேங்காய் பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. ஆங்காங்கே எப்போதாவது தென்படும் இந்த தேங்காய் பர்பியை நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில், மிக மிக சுலபமாக நாம் நொடியில் தயாரித்துக் கொள்ளலாம். ஒருமுறை தயாரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்து ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த தேங்காய் பர்பி எப்படி வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம்.

தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், தண்ணீர் – 50ml, பால் – 2 ஸ்பூன், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

தேங்காய் பர்பி செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் பர்பி செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு துருவிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை நீங்கள் துருவலில் துருவினால் ரொம்பவும் பெரிய பெரிய துருவலாக வந்து விழுந்துவிடும். எனவே தேங்காயை நீங்கள் துருவினாலும் ஒருமுறை மிக்ஸியில் ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தேங்காயை பத்தைகளாக போட்டு அதன் மேல் இருக்கும் ஓட்டு பகுதியை சீவி எடுத்து விட்டு பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் நெய்யை விட்டு நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் அளவிற்கு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை அதிக நேரம் வைத்தால் அதன் சுவை மாறிவிடும். எனவே ஒரு நிமிடம் லேசாக வறுத்து உதிரி உதிரியாக வரும் வரை எடுத்தால் போதும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதற்கு முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து 50ml அதாவது சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

சர்க்கரை பாகில் இருக்கும் அழுக்குகள் அல்லது கசடுகளை நீக்குவதற்கு 2 ஸ்பூன் பால் விட்டு நன்கு கொதிக்க வைத்தால் நுரை போல மேலே கசடுகள் மிதக்க ஆரம்பிக்கும். பின்னர் ஒரு இரும்பு வடிகட்டி எடுத்து அந்த நுரையை மட்டும் மேலோட்டமாக அப்படியே எடுத்து விடலாம். ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சர்க்கரையை நன்கு கொதிக்க வைத்த பிறகு நீங்கள் நெய்யில் வறுத்த தேங்காயை சேர்த்து கலந்து விடுங்கள். தேங்காய் நன்கு கொதிக்கும் இப்பொழுது கால் ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீதமிருக்கும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து நன்கு கலந்து விட்டால் நன்கு நுரைக்க கெட்டியான பதத்திற்கு தேங்காய் பர்பி தயாராகி விடும். அதன் பிறகு ஒரு நெய் தடவிய அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஓரளவுக்கு நன்கு சூடு ஆறும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு கத்தி எடுத்து நீங்கள் எந்த அளவுகளில் வெட்ட வேண்டுமோ, அந்த அளவுகளில் வெட்டிக் கொள்ளுங்கள். இறுதியாக நன்கு ஆறியவுடன் வில்லைகளாக தனித்தனியாக நன்கு வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க கெட்டியான தேங்காய் பர்பி நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி நாமே தயாரித்துக் கொள்ளலாம், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -