தேங்காய் போளி பிரியர்கள் ரொம்ப எளிதாக வீட்டில் நீங்களே எப்படி போளி தயாரிக்கலாம் தெரியுமா? சுவையான தேங்காய் போளி செய்முறை!

sweet-tamil
- Advertisement -

தேங்காய் போளி என்றால் அனைவருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு ஸ்வீட் வகையாக இருக்கும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மாறாமல் இருக்கும் இதன் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளமானோர் உங்களில் பலரும் இருக்கக்கூடும். இந்த தேங்காய் போளி செய்வது ரொம்பவே கடினமான விஷயம் என்று நினைத்தவர்களுக்கு இந்த ஒரு பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சுலபமாக எப்படி வீட்டில் தேங்காய் போளி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் போளி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தண்ணீர் – அரை கப், நெய் – 3 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – ஒன்றரை கப், வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் போளி செய்முறை விளக்கம்:
தேங்காய் போளி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு மைதா மாவு எடுத்துக் கொள்ளுங்கள். மாவில் கொஞ்சம் போல் உப்பை தூவி கலந்து விடுங்கள். மாவு நல்ல நிறத்தை கொடுக்க மஞ்சள் தூள் கால் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நன்கு எண்ணெய் விட்டு தளர்வாக மாவை கலந்து விட வேண்டும். போளி செய்வதற்கு அதிக எண்ணெய் தேவைப்படும். அப்போது தான் போளி சுவையாக இருக்கும். எனவே நன்கு எண்ணெய் பதத்துடன் மாவைத் தயாரித்து 2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். 2 லிருந்து 3 மணி நேரம் நன்கு ஊறிய பிறகு எண்ணெய் தனியாகவும், மாவு தனியாகவும் பிரிந்து வந்திருக்கும்.

அந்த சமயத்தில் மாவை நாம் போளி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குள் ஒரு பூரணத்தை தயாரிக்க வேண்டும். பூரணம் தயாரிக்க ஒரு வாணலி ஒன்றை அடுப்பில் வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். பின்னர் நீங்கள் எந்த கப்பில் மைதா மாவு அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காயை எடுத்து நெய்யில் போட்டு மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் நன்கு ஈரப்பதம் இல்லாமல் வறுபட்டு வரும் வரை காத்திருங்கள். பின்னர் முக்கால் கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். தேங்காயும், வெல்லமும் நன்கு சேர்ந்து வரும் போது கால் ஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

- Advertisement -

கெட்டியாக பூரணம் தயார் ஆனதும் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஊற வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து இலேசாக தட்டிவிட வேண்டும். இதற்கு ஒரு வாழை இலையை எடுத்துக் கொள்ளுங்கள். வாழை இலை இருந்தால் ரொம்ப சுலபமாக போளி எடுக்க வரும். வாழை இலை முழுவதும் எண்ணெயை தடவிய பின்பு இந்த மாவை வைத்து லேசாக அழுத்தினால் வட்டமாக விரிவடையும். அதில் இந்த பூரணத்தை ஒரு உருண்டை பிடித்து வையுங்கள். பின்னர் உருண்டை முழுவதையும் மாவால் மூடி வையுங்கள். கொஞ்சம் கூட ஓட்டைகள் இல்லாமல் மூடி வைத்த பிறகு வாழை இலையில் லேசாக எண்ணெயை தொட்டு தொட்டு நீங்கள் வட்டமாக அழுத்தம் கொடுத்தால் நன்கு விரிவடைந்து கொடுக்கும்.

மாவிலிருந்து பூரணம் வெளியில் வந்து விடக்கூடாது. ரொம்பவும் மெல்லியதாக இல்லாமலும், ரொம்பவும் தடிமனாக இல்லாமலும் மிதமான அளவிற்கு மாவை அழுத்தம் கொடுத்து விரித்து கொள்ளுங்கள். பிறகு தோசைக்கல் ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்ப இந்த போளியை போட்டு ஒருபுறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பி போடுங்கள். ஏற்கெனவே பூரணம் நன்கு வெந்திருக்கும் எனவே மாவு நன்கு வெந்த பிறகு எடுத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த தேங்காய் போளியை நீங்களும் ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -