இட்லி, தோசை, பூரி இதுபோன்ற காலை உணவிற்காக எப்போதும் ஒரே மாதிரியான சட்னி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா இவ்வாறுதான் சமைத்து கொடுப்போம். ஆனால் அனைவருக்கும் பிடித்த வடைகறி மசாலாவை வீட்டில் எப்போதாவது ஒருமுறைதான் செய்து கொடுப்போம். ஏனென்றால் வடைகறி செய்ய நேரம் அதிகமாக தேவைப்படும் என்ற காரணத்தினால்தான். ஆனால் இப்போது இங்கே சொல்லப்படும் முறையை பின்பற்றி வடைகறியை குறைந்த நேரத்தில் ஈசியாக குக்கரில் சமைத்து விடலாம். வாருங்கள் இதனை எப்படி சுலபமாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வடைகறி செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் கடலைப் பருப்பை தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மூன்று வரமிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை இரண்டாக பிரித்து இரண்டு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் அடுப்பின் தீயை சிறியதாக்கி தோசை கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள உருண்டைகளில் ஒரு உருண்டையை அதன் மீது வைத்து அடை போல் தட்டி கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடத்தில் இதன் அடிப்பகுதி நன்றாக சிவந்து விடும். பின்னர் இதனை திருப்பிப் போட்டு சிறிது நேரம் கழித்து அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அடுத்த உருண்டையையும் அடைபோல் தட்டி வேகவைத்து எடுத்து அதனை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இரண்டு துண்டு பட்டை, 2 பிரிஞ்சி இலை, 2 ஏலக்காய், 4 கிராம்பு மற்றும் அரை ஓம் சோம்பு சேர்த்து தாளித்து, மூன்று பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 2 தக்காளி மற்றும் இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் தனியா பொடி, ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகப் பொடி, அரை ஸ்பூன் கரம் மசாலா, கால் ஸ்பூன் சோம்பு பொடி, சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் புதினா தழை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன்பின் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை திறந்து ஒருமுறை கலந்து விட்டால் போதும். சுவையான ரோட்டு கடை வடை கறி மசாலா தயாராகிவிட்டது.