சூடான ‘முருங்கைக்கீரை சூப்’ சுவையாக எளிதாக எப்படி செய்யலாம்? ரத்த சோகையை விரட்டியடித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம் இதோ!

murungai-keerai-soup0
- Advertisement -

விதவிதமான சூப் வகைகளில் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் ராணியாக விளங்கும் இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நோய் தீரக்கூடிய சுலபமான வழியாக இருக்கும். மேலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அடிக்கடி மயக்கம் ஏற்படாமல் இருக்கவும், உடல் நல்ல வலுடன் மாறவும் இந்த முருங்கைக்கீரை சூப்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான முருங்கைக்கீரை சூப் எப்படி வீட்டில் செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

முருங்கைக் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, இடித்த பூண்டு பல் – நான்கு, அதே அளவிற்கு இஞ்சி இடித்தது, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம்:
முருங்கைக் கீரை சூப் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஜீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய் இரண்டை கிள்ளி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இடித்த பூண்டு பல், அதே அளவிற்கு இடித்த இஞ்சி ஆகியவற்றை சரிசமமாக சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள்.

இவற்றின் வாசம் லேசாக மாற ஆரம்பித்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு நன்கு மசிய வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயுடன் ஓரளவுக்கு முருங்கைக் கீரை வெந்து வரும் போது மஞ்சள் தூள் போட்டு கலந்து விட வேண்டும்.

- Advertisement -

முருங்கைக்கீரை சிறிதளவு வெந்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். கீரை வெந்து திக்கான சூப் போல ஆகியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இந்த சூப்பை அப்படியே குடிக்கலாம் அல்லது வடிகட்டியும் நீங்கள் குடித்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்து இருந்தால் இதை அப்படியே சாப்பிடுங்கள். இல்லை என்றால் வடிகட்டி சூப் மட்டும் குடித்து விட்டு, மீதம் இருக்கும் சக்கையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும் இந்த முருங்கைக்கீரை ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்தது! அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க துவங்கும். இதனால் ரத்த சோகை தடுக்கப்பட்டு ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இதே மாதிரி நீங்களும் செஞ்சு வீட்டில் இருக்கும் அனைவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளுங்கள்.

- Advertisement -