புளியோதரை பொடி சேர்க்காமல் சிம்பிளான புளியோதரை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து சுவைத்துப் பாருங்கள். மிகவும் அட்டகாசமாக இருக்கும்

puliyodharai
- Advertisement -

லெமன் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், தேங்காய் சாதம் இதுபோன்ற வெரைட்டி சாதங்கள் செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பெரும்பாலும் பலரது வீட்டில் செய்யும் உணவு என்றால் அது எலுமிச்சை சாதம் மற்றும் புளியோதரை தான். அதிலும் புளியோதரையை விருப்பமாக சாப்பிடுபவர்கள் தான் அதிகம் உள்ளனர். எங்கேயாவது வெளியூர் பயணம் செய்வதாக இருந்தாலும் இந்த புளியோதரையை எடுத்துச் செல்ல மிகவும் அருமையாக இருக்கும். முதல் நாள் செய்த குழம்பில் மறுநாள் சாதம் கிளறி சாப்பிடும்பொழுது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இதற்கு புளியோதரைப் பொடி சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. இப்படி சிம்பிளான புளியோதரை சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
புளி – 150 கிராம், எண்ணெய் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் 150 கிராம் புளியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் புளியை கரைத்து 2 கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு 10 வரமிளகாயை எடுத்துக்கொண்டு, அதன் காம்பு பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுக்க வேண்டும். பிறகு முழு மிளகாயையும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 100 கிராம் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். இவை நன்றாக பொரிந்ததும் இதனுடன் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவேண்டும்.

பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை வேகமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பிறகு இதனுடன் உப்பு சேர்த்து கிளறி விடவேண்டும். 10 லிருந்து 15 நிமிடம் கழித்து ஊற்றிய புளி கரைசல் சற்று கெட்டியான பதத்திற்கு வர ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை அனைத்து விட வேண்டும். அதன்பிறகு இந்த குழம்புடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான புளியோதரை சாதம் சட்டென தயாராகிவிடும்.

- Advertisement -