இரும்புச்சத்து நிறைந்த எள் துவையல்

ellu thuvaiyal
- Advertisement -

“கொளுத்தவனுக்கு கொள்ளு எலச்சவனுக்கு எள்ளு” என்னும் பழமொழி கிராமப்புறங்களில் அதிக அளவில் பரவலாக பேசப்படும் ஒரு மொழியாகும். இதற்கு காரணம் மிகவும் உடல் மெலிந்து போய் இருப்பவர்கள் எள்ளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் என்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கொள்ளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறையும் என்பதுதான். இப்படி சிறப்பு மிகுந்த எள்ளை எளிமையான முறையில் எப்படி துவையல் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

எள்ளில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், நார்சத்து என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எள்ளை ஒரு குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொள்வதன் மூலம் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். செரிமான பிரச்சனைகள் சரியாகும். புற்று நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதுமட்டும் அல்லாமல் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருப்பு எள் – 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • பூண்டு – 8 பல்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உளுந்து – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 8
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கடாயில் எள்ளை போட்டு எள்ளு பொறியும் அளவிற்கு வந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றி வைத்து விட வேண்டும். அதிக நேரம் எள்ளை அடுப்பில் வைத்தால் ஒருவித கசப்பு சுவை ஏற்பட்டு விடும். இப்பொழுது மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுந்தை சேர்க்க வேண்டும்.

உளுந்து லேசாக சிவக்க ஆரம்பித்ததும் அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இரண்டையும் சேர்க்க வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும், வெங்காயமும் வதங்கிய பிறகு புளி மற்றும் தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நாம் வதக்கி வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் கருப்பு எள்ளையும் அதனுடன் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து துவையல் வேண்டும் என்பவர்கள் சிறிது மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். சட்னி வேண்டும் என்று நினைப்பவர்கள் சட்னிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம்.

விருப்பம் இருப்பவர்கள் ஒரு தாலிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளித்து துவையலிலோ அல்லது சட்னியியோ ஊற்றிக் கொள்ளலாம். இட்லி, தோசை, சப்பாத்தி சாதம் என்று அனைத்து விதமான உணவுகளுக்கும் இது ஒரு ஏற்ற ஒன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து சாதம்

உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளையும் தரக்கூடிய இந்த எள்ளை வாதத்திற்கு ஒரு முறையாவது நம்முடைய உணவில் ஏதாவது ஒரு ரூபத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -