நெகட்டிவ் திங்கிங்! எல்லோருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது. எந்த ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போதும் அது வெற்றி அடையும் என்று யாரும் யோசிப்பது இல்லை. ஒருவேளை இந்த முயற்சியில் நாம் தோற்றுப் போய் விடுமோ! என்றுதான் முதலில் சிந்திப்போம். இந்த நெகட்டிவ் திங்கிங் நம்மை வாழ்க்கையில் முன்னேற விடாது. மனிதனுடைய மூளைக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெரியாது. நாம் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ, அதை உடனடியாக நடத்தி கொடுத்துவிடும். என்னைக்குதான் நாம் நல்லது நினைத்து இருக்கின்றோம்? நல்லது நடப்பதற்கு!

எப்போதுமே எதிர்மறையான எண்ணங்கள். எதிர்மறையான யோசனைகள் இருந்தால் எப்படி நமக்கு நல்லது நடக்கும். சரிங்க, சொல்றவங்க ஈஸியா சொல்லிடலாம். ஆனா நேர்மறை எண்ணங்களை நம்முடைய மனதில் வளர்ப்பது என்பது மிக மிக கடினமான விஷயம் தான். ஒரு நாள் இரண்டு நாளில் இதை நம்மால் கொண்டுவந்துவிட முடியாது. நல்லதை நினைத்து பழகப் பழகத்தான் நம்முடைய மூளை தொடர்ந்து நேர்மறையான விஷயங்களை சிந்திக்கத் தொடங்கும். சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த நேர்மறை ஆற்றலை அதிகரித்துக் கொள்ள, அதாவது நெகட்டிவ் திங்கிங்கை குறைத்துவிட்டு, பாசிட்டிவ் திங்கிங்கை அதிகரிக்க ஆன்மீக ரீதியாக ஏதேனும் வழி உண்டா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் வழி இருக்கின்றது. அதை பற்றியும் நாம் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். நேர்மறை ஆற்றலை வாரி வழங்கக்கூடிய சக்தி கொண்ட ஒரே இலை வில்வ இலை.

பெரும்பாலும் நிறைய இடங்களில் வில்வ இலை சுலபமாக கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வில்வ இலையை வைத்திருக்கும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்கு சென்றால் நிச்சயம் வில்வ இலை கிடைத்து விடும் அல்லவா. அந்த இலையை வீட்டிற்குக் கொண்டு வந்து அரைத்து நம்முடைய தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
வில்வ இலையை அரைத்து விழுதை தலை முழுவதும் தேய்த்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, குளித்தாலும் சரி. அப்படி இல்லை என்றால் கொஞ்சமாக விழுதை எடுத்து உச்சந்தலையில் நன்றாக தேய்த்து விட்டு அப்படியே 5 நிமிடங்கள் விட்டு விட்டு தலைக்கு குளித்தாலும் சரிதான். நம்மிடம் இருக்கும் மனக்குழப்பங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும்.

இதுபோல எத்தனை நாட்கள் செய்வது. ரொம்பவும் கஷ்டத்தில் இருப்பவர்கள், ரொம்பவும் மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் பித்து பிடித்தது போல அலைந்து கொண்டே இருக்கிறீர்கள் என்றால் தொடர்ந்து 5 நாட்கள் இப்படி குளித்தால் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். உங்களை அறியாமலேயே உங்களுடைய மூளை நேர்மறையாக நல்ல எண்ணங்களோடு சிந்திக்கத் தொடங்கி விடும். இப்போதெல்லாம் உங்களுக்கு பித்துப் பிடித்ததுபோல் குழப்பமாக உள்ளதோ அப்போதெல்லாம் மேல் சொன்ன வில்வ இலை குளியலை குளித்து வரலாம் தவறொன்றும் கிடையாது.

பித்து பிடித்தது போல என்றால் பைத்தியக்காரர்கள் என்று சொல்ல வரவில்லை. தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம். திடீர் குழப்பத்தில் நாமே குழம்பி விடுவோம் அல்லவா? அந்த சூழ்நிலையில் வில்வ இலை, குழப்பத்திற்கு உங்களுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும்.